×

குன்னூர் அருகே காலில் கம்பி குத்திய நிலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு மாட்டுக்கு சிகிச்சை: வனத்துறையினர் நடவடிக்கை

குன்னூர்: குன்னூர் அருகே காலில் கம்பி குத்திய நிலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு மாட்டுக்கு முதற்கட்டமாக சிகிச்சையை குன்னூர் வனத்துறையினர் துவக்கி, வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளதால், இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை குடிநீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பை நோக்கி படையெடுத்து வருகின்றன. குடியிருப்பில் உலா வரும் காட்டு மாடுகள் சில சமயங்களில் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்படுகிறது.

மேலும் தடுப்பு வேலிகளில் அடிக்கடி சிக்கிக்கொள்கிறது. குன்னூர் பகுதியில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. குன்னூர் அருகே சின்ன கரும்பாலம் பகுதியில் 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் காட்டு மாடு ஒன்று, வலது பின்னங்காலில் கம்பி குத்திய நிலையில் காயத்துடன் கடந்த ஒரு வார காலமாக சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் பேரில் வனத்துறையினர் காட்டு மாட்டை கண்காணித்து வந்தனர்.

காட்டு மாடு இருக்கும் இடத்தை அறிந்த வனத்துறையினர் நேற்று முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேசை வரவழைத்து காட்டு மாட்டுக்கு மயக்க ஊசி செலுத்தி, சிகிச்சை அளித்தனர். காயத்தை சரி செய்யும் வகையில் முதற்கட்டமாக காலில் சிக்கி கொண்டிருந்த கம்பியை அகற்றி, மருந்து வைத்து கட்டினர். பின் காட்டு மாட்டுக்கு உணவின் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டதுடன் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து, காட்டு மாட்டை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து வனத்துறையினரின் இந்த மனித நேயமிக்க துரித நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.

The post குன்னூர் அருகே காலில் கம்பி குத்திய நிலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு மாட்டுக்கு சிகிச்சை: வனத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Forest Department ,Coonoor Forest Department ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...