×

பொது சிவில் சட்டம் கொண்டுவருவது இந்தியாவின் பன்முக தன்மைக்கு எதிரானது: பாஜக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியே எதிர்ப்பு

மேகாலயா: நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டுவருவது இந்தியாவின் பன்முக தன்மைக்கு எதிரானது என்று பாஜக கூட்டணியான தேசிய மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி இருவிதமான சட்டங்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்றும் மக்கள் அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் கூறுவதால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்றும் கூறினார். பிரதமரின் கருத்துக்கு முஸ்லீம் சட்ட வாரியம், காங்கிரஸ், திமுக, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மக்களை பிளவுபடுத்தி வெறுப்புணர்வை வளர்க்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி குற்றம் சாட்டினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தியே இந்த சட்டத்தை கொண்டு வர பாஜக முயல்வதாக அவர் தெரிவித்தார். பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாட்டில் பெருபான்மை சமூகத்தை மனதில் வைத்து ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் இந்த சட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பொது சிவில் சட்டம் கொண்டுவரும் திட்டத்தை ஒன்றிய அரசும், சட்ட கமிஷனும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மேகாலயாவில் பாஜக கூட்டணியான தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான கான்ராட் சங்மா பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த செயல் இந்தியாவின் பன்முகதன்மை மற்றும் தனித்துவமான கலாச்சாரத்திற்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார். மேகாலயா உட்பட வடகிழக்கு மாநிலங்கள் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சமூகத்தை கொண்டவை என்றும் அதை தொடர்ந்து கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளதாகவும் சங்மா தெரிவித்துள்ளார். இதனால் மேகாலயாவில் பாஜக கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post பொது சிவில் சட்டம் கொண்டுவருவது இந்தியாவின் பன்முக தன்மைக்கு எதிரானது: பாஜக கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியே எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : India ,National People's Party ,Bajaka alliance ,Meghalaya ,Bajaka ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...