×

ஆபரேஷன் சிந்தூரில் அதிரடி காட்டிய போது வார் ரூமில் லைவில் பார்த்த தளபதிகள்: புகைப்படங்களை வெளியிட்டது ராணுவம்


புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவம் அதிரடி காட்டிய போது வார் ரூமில் இருந்து கண்காணித்த முப்படை தளபதிகள் புகைப்படங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை குரூஸ் ஏவுகணைகள், லேசர் வழிகாட்டப்பட்ட குண்டுகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்கள் அழித்தன.

கடந்த 7ம் தேதி அதிகாலை 1:05 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி, பிம்பர், குல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள ஒன்பது முகாம்களை அழித்தன. இந்த ஆபரேஷன் மூலம் 150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்றது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களை மூன்று படைகளின் தலைமை அதிகாரிகள் கண்காணித்த காட்சிகளை முதல் முறையாக புகைப்படங்களாக ராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் அறையில் (வார் ரூம்) இருந்து வான்வழி தாக்குதல்கள் நிகழ்ந்த நேரத்தில் கண்காணித்தது தெரியவருகிறது. இந்த புகைப்படங்கள், இந்திய ராணுவத்தின் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய படைகளின் ஒருங்கிணைந்த பணியையும், துல்லியமான தாக்குதல் திறனையும் இந்த காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன. இந்த புகைப்படங்களில், மூன்று படைகளின் தலைவர்களும் ட்ரோன் காட்சிகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தாக்குதல்களை உன்னிப்பாக கண்காணித்தனர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

லோகோவை உருவாக்கியது யார்?
ஆபரேஷன் சிந்தூரின் லோகோவை உருவாக்கியவர்கள் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் ஆவர். இந்த லோகோ, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் முக்கிய அடையாளமாக அமைந்தது. இந்த லோகோவில் உள்ள சிவப்பு நிறம் (சிந்தூர்) பெண்களின் வலிமையையும், தியாகத்தையும் குறிக்கிறது. மேலும் இந்த ஆபரேஷனில் பெண் அதிகாரிகளின் பங்கு முக்கியமானதாக இருந்தது. லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் ஆகியோரின் இந்த பங்களிப்பு, ஆபரேஷனின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பாராட்டப்பட்டுள்ளது.

The post ஆபரேஷன் சிந்தூரில் அதிரடி காட்டிய போது வார் ரூமில் லைவில் பார்த்த தளபதிகள்: புகைப்படங்களை வெளியிட்டது ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Operation Shintur ,NEW DELHI ,Indian Army ,Bahalkam ,Pakistan ,Kashmir region ,Operation Sindur ,Dinakaran ,
× RELATED 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த...