×

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடக்கம்: கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 3.28 லட்சம் பேர் பயனடைவர்

கோவை.: கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவர். தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்கும் நோக்கில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோல் பள்ளிக் கல்விமுடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்க விழா கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டி, நாம் செயல்படுத்தி வந்தாலும், ஒரு சில திட்டம்தான் நமது மனதுக்கு நெருக்கமான திட்டமாக இருக்கும். வரலாற்றில் என்றும் நமது பெயரை சொல்லப்ேபாகிற திட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டம்தான் தமிழ்ப் புதல்வன் திட்டம். இந்த திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். கடந்த 3 ஆண்டில் திராவிட மாடல் ஆட்சியில், மக்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் திட்டம் நிறைய நிறைவேற்றி உள்ளோம்.

அந்த வகையில், தமிழ்நாடுதான் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என சொல்லும் அளவுக்கு, திராவிட மாடல் அரசு உள்ளது. திராவிட மாடல் அரசு என்பது சமூக நீதிக்கான அரசு. பெண்கள் ெபாருளாதாரத்தில் உயர வேண்டும். மாணவர்கள் தங்களது வாழ்வில் மேம்பட வேண்டும் என்கிற லட்சியத்தோடு பயணிக்கிறோம். மாணவிகளை புதுமைப்பெண் திட்டம்போல், மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்.

இந்த திட்டத்தின்கீழ், அரசு பள்ளியில் படித்து, கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்க இத்திட்டம் உதவும். மாணவர்களை, சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ்வழி கல்வியில் படித்து, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தின்கீழ் பயன் அடையலாம்.

கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்து கல்லூரி, சட்டம் சார்ந்த படிப்புகள், அதற்கு இணையான படிப்பு, தொழிற்பயிற்சி படிப்பு என பல்வேறு கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக, இந்த ஆண்டு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் சேரும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்தகைய முன்னோடி திட்டங்களின் மூலம், நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்கால தூண்களாக திகழ்வார்கள். ஒரு தந்தை நிலையில், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து, உங்களுக்காக உருவாக்கிய திட்டம்தான் இந்த திட்டம்.

இதன்மூலம் நீங்கள் அடையும் வளர்ச்சியை, நான் அடுத்தடுத்த ஆண்டுகளில் கவனமாக கண்காணிப்பேன். வரும் 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. இதன்மூலம் வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் உயரும். எல்லா மாணவர்களுகம் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. ஒரு மாணவன்கூட உயர்கல்வி கற்காமல் திசை மாறி சென்று விடக்கூடாது.

மாணவர்கள் தங்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப நல்ல வேலைவாய்ப்பு பெற வேண்டும். நம் மாணவர்கள், உயர்கல்வி பல பயின்று, வாழ்க்கையில் சிறக்க வேண்டும். இதுதான் என்னுடைய லட்சிய கனவு. இந்த இலக்கை அடைய, நான் கடுமையாக உழைத்து, பல புதிய திட்டங்களை உருவாக்கி உள்ளேன். இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்காக, உங்களது குடும்ப முன்னேற்றத்துக்காக பாடுபடவேண்டும். வறுமை இல்லாத தமிழ் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும்.

உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க, எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அப்படி தடை ஏற்பட்டால், அந்த தடையை நீங்கள் உடைத்தெறிய வேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.  திராவிட மாடல் அரசு தயாராக இருக்கிறது. ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடையை எதிர்கொண்டார் என நம் எல்லோருக்கம் தெரியும், நாம் எல்லோரும் பாராட்டும் அளவுக்கு அவர் கொடி கட்டி பறக்கிறார்.

தடைகள் என்பதே, அதை உடைத்தெறியத்தான். தடையை பார்த்து ஒருபோதும் சோர்ந்து விடக்கூடாது. வெற்றி ஒன்றே நம் இலக்காக இருக்க வேண்டும். அதை குறி வையுங்கள். நிச்சயம் அது ஒருநாள் வசப்படும். உங்கள் மீது, நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைவிட, நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். மறந்து விடாதீர்கள். வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறப்போகும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன்களுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இவ்விழா முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்கடம் சென்றார். அங்கு கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை ரூ.481 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது சாலையோரம் கூடியிருந்த தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடியே சென்றார். தொடர்ந்து அவர் காரில் ஏறி மேம்பாலத்தை ரசித்தபடி சென்றார். இந்த பாலம் திறப்பால் பயண நேரம் குறைவதால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர், வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* ‘இனி பார்ட் டைம் பணிக்கு செல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும்’
கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சரவணகுமார் கூறுகையில், ‘‘நான் அரசியல் அறிவியல் பிரிவு படித்து வருகிறேன். எனது, குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா கூலி வேலை செய்கிறார். அம்மா வீட்டு வேலைக்கு செல்கிறார். இவர்களிடம் புத்தகம் வாங்க, தேர்வு கட்டணம் செலுத்த பணம் கேட்பது கஷ்டமாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் நான் கல்லூரி முடித்துவிட்டு மீதமுள்ள நேரத்தில் பார்ட் டைம் பணிக்கு சென்று கொண்டு இருக்கிறேன். இந்த பார்ட் டைம் பணியில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் எனது அன்றாட தேவைகளை சரிசெய்து வருகின்றனர். பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாத நிலை இருந்தது.

இந்த கஷ்டமான சூழ்நிலையில்தான் தமிழ்நாடு முதல்வர் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அளிக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 கிடைக்கும். இந்த பணத்தை வைத்து படிப்பு செலவு, தேர்வு செலவு போன்றவற்றை பார்த்துக்கொள்வேன். வீட்டில் பணம் கேட்க வேண்டும் என அவசியம் இல்லை. மேலும், இத்திட்டத்தால் இனி பார்ட் டைம் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டு முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த முடியும்’’ என்றார்.

* ‘பாதி வருமானம் கிடைச்சுடுச்சி…எங்கள் கஷ்டம் போய்விட்டது…’- வைரலாகும் வீடியோ
தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாணவர்கள் பாராட்டி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் ஒரு மாணவர், ‘‘அக்காவும் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 ரூபாய் வாங்குகிறார். எனக்கும் தற்போது ரூ.1000 கிடைக்கிறது’’ என்று கூறுகிறார். இன்னொரு மாணவர், ‘‘அம்மாவுக்கு மகளிர் உதவித்தொகை மாதம் 1000 ரூபாய் கிடைக்கிறது. ஒரு ஏழையின் ஆண்டு வருமானமே ரூ.82 ஆயிரம்தான். அதில் பாதி வருமானம் ரூ.36 ஆயிரம் 3 பேருக்கு சேர்த்து ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் வந்துவிடுகிறது. இதன்மூலம் எங்கள் கஷ்டம் போய்விட்டது’’ என்று கூறுகிறார்.

* தந்தையாக திகழும் முதல்வர்
விழாவில் பங்கேற்று, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற கல்லூரி மாணவர்கள் பேசுகையில், ‘‘இந்த நிதியுதவி எங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். பஸ் பயண செலவு, நோட்டு, புத்தகம் வாங்குவதற்கு, பீஸ் செலுத்துவதற்கு என பல வகையில் உதவிகரமாக இருக்கும். இந்த உதவித்தொகை, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கும். குடும்ப வளத்தை மேம்படுத்தும். மாணவர்களிடையே கற்கும் திறனை அதிகரிக்கும். இத்திட்டம், சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல் உள்ளது. இளைஞர்களுக்கு தந்தையாகவும், வழிகாட்டியாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அவருக்கு பெரும் நன்றி’’ எனக் கூறினர்.

* முதல்வருக்கு பாஜ எம்எல்ஏ நன்றி
விழாவில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்றார். இவ்விழா, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த காரணத்தால், அவர் முதல் நபராக வந்து, இவ்விழாவில் பங்கேற்றார். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை. கோவை அரசு கலைக்கல்லூரி விடுதியில் படுக்கை வசதி பற்றாக்குறை இருப்பதால், 600 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் இடவசதி ஏற்படுத்தி கொடுக்கவும்,

இடையூறுன்றி மாணவர்கள் படிக்க பல்நோக்குகூடமும் அமைக்கவும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், கோவை அரசு கல்லூரிக்கு புதிய விடுதி மற்றும் கருத்தரங்கு கூடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதையடுத்து, வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் அரசு கல்லூரிக்கு புதிய விடுதி கட்ட பரிந்துரை செய்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

* முன்கூட்டியே கிடைத்த ரூ.1000 மாணவர்கள் மகிழ்ச்சி
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். ஆனால், இத்திட்டம் துவங்குவதற்கு முந்தைய நாள் இரவு மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் அவர்களுக்கு ரூ.1000 கிரெடிட் ஆனது. இதனால், நிகழ்ச்சிக்கு வரும்போதே மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இதனால், அவர்கள் விழா மேடைக்கு முதல்வர் வந்தபோது கை தட்டியும், ஆரவாரமாக சத்தமிட்டும் வெளிப்படுத்தி முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர்.

* விரைவில் முதலாமாண்டு மாணவர்களுக்கு…
தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து கலை அறிவியல், மருத்துவம், வேளாண், இன்ஜினியரிங், சட்டம், ஐடிஐ கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை முழுமையாக முடியாத நிலையில், இரண்டாம் ஆண்டு, 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. விரைவில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 அளிக்கப்பட உள்ளது. மேலும், வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு துவங்கி அவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

The post கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடக்கம்: கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 3.28 லட்சம் பேர் பயனடைவர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M K Stalin ,Coimbatore ,M.K.Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழர்கள் உயர்ந்த நிலைகளில்...