×

18 வயது நிரம்ப 12 நாளுக்கு முன்பு காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவி: பாதுகாப்பு கேட்டு சரணடைந்தவர் சிக்கினார்

* திருமணம் செய்த கணவர் மீது போக்சோ பாய்ந்தது

சேலம்: சேலத்தில் மேஜர் ஆவதற்கு 12 நாட்கள் இருக்கும் முன்பே காதலனுடன் ஓடி சென்று திருமணம் செய்து கொண்ட நிலையில், 37 வயதானவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி, அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 5ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை தேடினர். கண்டுபிடிக்க முடியாத நிலையில் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருச்சி உப்பிலியாபுரம் போலீஸ் ஸ்டேசனில் கல்லூரி மாணவியும், துறையூர் ஆலந்துறையான்பட்டியை சேர்ந்த சதீஷ் (37) என்பவரும் சரணடைந்தனர். அச்சிறுமி, கடந்த 17ம் தேதி, ‘எனக்கு 18 வயது முடிந்து விட்டது.

மேஜரான நான், ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனது பெற்றோர், நான் காணாமல் போய்விட்டதாக சேலம் சூரமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர். எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து உப்பிலியாபுரம் போலீசார் அளித்த தகவலின் பேரில் சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று இருவரையும் சேலம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், மாணவிக்கு 18 வயது முடிய 12 நாட்கள் இருந்தது. கடந்த 17ம் தேதிதான் 18 வயது பிறந்தது. மறுநாள் (18ம் தேதி) திருச்சியில் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இடையில் உள்ள 12 நாட்களில் அவர் எங்கு இருந்தார்? என விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர் சதீஷ் ஏற்கனவே திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்து செய்ததும் தெரியவந்தது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அவரது சகோதரி வீட்டில் தங்கியிருந்து சதீஷ் வேலை செய்து வந்துள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததும் தெரியவந்தது. அவர் வீட்டிலிருந்து சதீசுடன் சென்றபோது மைனர் பெண் என்பதால், சதீஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு அரசு பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘மேஜர் ஆகிட்டேன், எங்களை சேர்த்து வைங்க’ என்று போலீஸ் நிலையம் சென்ற மாணவி ‘இப்படி நடக்கும் என்று யோசிக்கவில்லையே’ என்று புலம்பியவாறு பாதுகாப்பு மையத்தில் தவிப்புடன் உள்ளார்.

The post 18 வயது நிரம்ப 12 நாளுக்கு முன்பு காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவி: பாதுகாப்பு கேட்டு சரணடைந்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : POCSO ,Salem ,Salem… ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது