×

76 வயதிலும் கூட்டு பண்ணையில் சாதிக்கும் சூப்பர் விவசாயி..!

ராணிப்பேட்டை: சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை போல், ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நம் வாழ்க்கையையே அனுபவித்து வாழ முடியும்” என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்கிறார் சோளிங்கர் விவசாயி நடராஜன். 12 வயதில் இருந்து இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் 76 வயதிலும் பாரம்பரிய நெல் ரகங்களையும் சிறு தானியங்களை உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயியாக விளங்குகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள குருவராஜப்பேட்டையில் கூட்டு பண்ணை முறையில் விவசாயம் செய்யும் நடராஜன் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“மொத்தம் 12 ஏக்கர்ல முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் பண்றேன். 3 ஏக்கர்ல தங்க சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா மாதிரியான பாரம்பரிய நெல் ரகங்கள பயிர் பண்றேன்.

இந்த 3 ஏக்கர சுத்தியும் வரப்போரங்கள்ல டிம்பர் மரங்கள நட்டுருக்கேன். இதுமட்டுமில்லாம ஒரு ஏக்கர்ல தனியா தேக்கு, மகோகனி, வேங்கையும் மரங்கள மட்டுமே நட்டுருக்கேன். இன்னொரு ஏக்கர்ல மரங்களுக்கு இடையில கனகாம்பரம் செடி வளர்க்குறேன். மிச்சம் இருக்குற 7 ஏக்கர்ல 5 ரகமான தீவினப் புல்லும் வளர்க்குறேன். அதோடு சேர்த்து 200 நாட்டு கோழிகளையும் வளர்க்குறேன். பண்ணைக் குட்டையில வாத்தும் வளர்க்குறேன். இதுனால பல வழிகள்ல எனக்கு வருமானம் வருது” என கூறினார். என்னென்ன வழிகளில் வருமானம் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “ஒரு ஏக்கர் கனகாம்பர தோப்புல மட்டும் தினமும் 7, 8 கிலோ பூ கிடைக்குது. ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விக்கிறேன். எல்லா செலவும் போக ஏக்கருக்கு மாசம் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிகர லாபம் கிடைக்குது.

நான் மொத்தம் 7 வகையான நாட்டு கோழிகள் வளர்க்குறேன். கோழிப் பண்ணை மாதிரி கூண்டுல வச்சு வளர்க்காம தோட்டத்துல திரியுறமாதிரி தான் வளர்க்குறேன். நிலத்த சுத்தி வேலி போட்டுருக்கனால, கோழிங்க நிலத்த விட்டு வெளிய போகாது. 5 முதல் 6 ஆறு மாசம் வளர்ந்த நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை ஆகுது. அதுலயும் கடக்நாத்ங்கிற கருங்கோழி ஒரு கிலோ ரூ.700 வரை விற்பனை ஆகுது. கோழிகளுக்குன்னு தனியா தீவன செலவுனு பெரிசா எதுவும் கிடையாது. தோட்டத்துல நிறைய மரங்கள் இருக்குறனால கோழிங்க வளர்றதுக்கு ஏத்த சூழலும் இருக்கு” என கூறியவர் ஒருங்கிணைந்த பண்ணையில் மரங்களின் அவசியம் குறித்தும் விளக்கினார். “நான் இயற்கை விவசாய பண்றனால நாட்டு மாட்டோட சாணம், கோமியத்த தான் உரமா பயன்படுத்துறேன். அதோடு மரங்களோட இலை, தளைகளும் சேரும் போது மண்ணோட வளம் இன்னும் அதிகரிக்கும்.

நிலத்துக்கு அடியில இருக்குற சத்துக்கள் மேல எடுத்து தன்னோட இலைகள் மூலமா மேல் மண்ணுக்கு கொடுக்குற திறமை மரங்களுக்கு இருக்கு. அதுமட்டுமில்லாம, பொருளாதார ரீதியாவும் விவசாயம் மரம் ரொம்ப உதவியா இருக்கும். 20 வருசத்துக்கு முன்னாடியே நான் தேக்கு மரங்கள வெட்டி வித்துருக்கேன். அப்பவே 2, 3 லட்சத்துக்கு விலை போச்சு. அதுனால, டிம்பர் மரங்களுக்கு எப்பவுமே பண மதிப்பு இருக்கும். அதுனால தான் நான் தேக்கு, மகோகனி, வேங்கை, ரோஸ்வுட், கருமருது, நீர் மருது, பலா மரம், இளவம் பஞ்சு மரம்னு சுமார் 2,000 மரங்கள நட்டு வளர்க்குறேன். அதுனால, எல்லா விவசாயிங்களும் டிம்பர் மரங்கள்ல கட்டாயம் வளர்க்குறது அவங்களுக்கு ரொம்ப நல்லது. ஈஷா நர்சரிகள்ல விவசாயிங்களுக்கு வெறும் 3 ரூபாய்க்கு டிம்பர் மரக்கண்ணுங்கள கொடுக்குறாங்க.

அதுமட்டுமில்லாம அந்த மரங்கள எப்படி நட்டு வளர்க்கணும்னு இலவச ஆலோசனையும் கொடுக்குறாங்க. உதாரணத்துக்கு, என்னோட தோட்டத்துல இருக்குற இளவம் பஞ்சு மரத்துல இருந்து பஞ்ச எடுத்து நானே தலைகாணியும், பெட்டும் ரெடி பண்ணி நேரடியா விக்கிறேன். 5 அடிக்கு ஆறரை அடி பெட் ரூ.15 ஆயிரத்துக்கு வரைக்கும் விற்பனை பண்றேன். இந்த மரங்கள் பேங்க்ல போட்ட ஃபிக்ஸ்ட் டெபாசிட் மாதிரி 15, 20 வருசம் களிச்சு என்னோட பேர குழந்தைகளுக்கு நல்ல பொருளாதார பலன்கள கொடுக்கும்” என்றார். மரம் சார்ந்த விவசாயம் குறித்த இலவச ஆலோசனைகள் பெறுவதற்கு காவேரி கூக்குரல் இயக்கத்தை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post 76 வயதிலும் கூட்டு பண்ணையில் சாதிக்கும் சூப்பர் விவசாயி..! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...