×

காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையில் இருந்து ஆரஞ்சு வகையாக மறுவகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நீடித்த நிலைத்தன்மையினை உறுதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்’ என்ற நிறுவனம் ஒன்றினை துவக்கி மதிப்பு கூட்டப்பட்டுள்ள பொருட்கள் உற்பத்தியினை அதிகரிக்கவும் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் நம் மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் காயர் பித் உள்ளிட்ட தென்னை சார் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பெருமளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதுடன் மொத்தத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் இந்நிறுவனங்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு மிகுந்த கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இம்முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையிலும் அதேசமயம் இந்நிறுவனங்கள் நிலைத்தன்மையுடன் இயங்கிடவும் வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்