(மத்தேயு 21: 12-17)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எருசலேமுக்குள் நுழைந்தது முதல் ஒவ்வொரு நிகழ்வும் அடுக்கடுக்காயும், விரைவாகவும் நடந்தேறின. பல்வேறு ஊர்களிலிருந்து மகிழ்ச்சியோடு பஸ்காப் பண்டிகை கொண்டாட எருசலேம் நகருக்கு வந்தவர்களுக்கு கலிலேய இளைஞரான இயேசுவுக்கு வழங்கப்பட்ட சிலுவைத் தண்டனை அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் பாமரமக்கள், ஏழைகள், பெண்கள், நோயுற்றோர் மற்றும் சமூக இழிவைச் சுமந்தவர்கள் யாவருக்கும் இயேசு நம்பிக்கை நட்சத்திரமாகவும் மீட்பராகவும் விளங்கினார். அதே சமயம் இயேசுவின் மீது வெறுப்புக் கொண்டிருந்தவர்களுக்கு அவரின் இந்தக் கோவில்நுழைவுப் போராட்டம் அவர் மீதிருந்தக் கோபத்தை மேலும் கிளரிவிட்டது.
எருசலேம் என்பது மலைப்பட்டணம் ஆகும். எபூசியர் வசமிருந்த இந்நகரைத் தாவீது அரசர் கைப்பற்றித் தமக்கு ஒரு அரண்மனையையும் கட்டிக்கொண்டார். அவரது மகனான சலமோன் அரசர் பிரம்மாண்டமான எருசலேம் தேவாலயத்தை மிகுந்தப் பொருட் செலவில் கட்டினார். அதன் பின்னர் இந்த ஆலயம் அமைந்திருந்த சீயோன் மலை யூதர்களின் அடையாளமாகவும், புனித இடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மற்றும் கடவுள் குடியிருக்கும் இடமாகவும் கருதப்பட்டது. (யோவேல் 3:17; திருப்பாடல்கள் 132:13)
எருசலேம் கோயில் புனிதம் எனக் கருதப்பட்டது. மேலும், அங்கு தூய்மை, தீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. இங்கு யூதரின் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது; தனிநபர் வேண்டுதல்கள் ஏறெடுக்கப்பட்டது; காணிக்கை படைத்தல் பலிகள் நிறைவேற்றுதல் நடத்தப்பட்டது. இந்தக் கோயிலை மையப்படுத்தி வியாபாரங்கள் நடந்தன; சுற்றுலா அதிகரித்தது; அதிகாரம் மைய்யம் கொண்டது; போர்களும் கொள்ளையடிப்பும் நடந்தது.
பஸ்காப் பண்டிகைகக்குச் செல்வதை இயேசு தமது சிறு வயது முதல் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இம்முறை மக்கள் அவரை மேசியாவாக அரசராக அடையாளப்படுத்தி ஊர்வலமாக முழக்கங்கள் எழுப்பி அழைத்துச் சென்றனர். இச்செயல் எருசலேம் வாழ் அரசியல் அதிகாரங்கள், மற்றும் சமய அதிகாரங்களை வியப்புக்கு ஆளாக்கி இருந்த நேரம் இயேசுவின் எருசலேம் கோயில் நுழைவும் தூய்மைப்படுத்தலும் அவர்களை அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கியது.
அவர் ‘‘கோயிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும், புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.’’ இயேசுவின் இச்செயல் மூலம் அவர் கோபம் எப்படிப்பட்டது என்று தெரிகிறது. அது மட்டுமல்ல ‘‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகின்றீர்கள்’’ (எசாயா 56:7; எரேமியா 7:11) என்று தமது செயலுக்கு இறைவாக்கினரையும் துணைக்கு அழைத்தார். அவர் இன்னும் ஒருபடி மேலே போய் தடைவிதிக்கப்பட்டிருந்த பார்வையற்றவர்களையும் கோயிலுக்குள் குணமாக்கினார்.
இவ்வாறு ஒரு கலிலேய இளைஞனின் அத்துமீறிய செயலைக் கேள்வியுற்ற ‘‘தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும், அவரை எப்படி ஒழித்துக்கட்டலாம் என வழிதேடினார்கள்’’ (மாற்கு 11:18). இவ்வாறு இயேசு கடவுளுக்கு மட்டும் அஞ்சுபவராக வாழ்ந்து அதனால் வரும் இன்னல்களைக் கண்டு அஞ்சாதவராக வாழ்ந்தார்.
பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).
The post இயேசு – எருசலேம் கோயிலைத் தூய்மையாக்குதல் appeared first on Dinakaran.