×

அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி (இன்று) பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.அதன்படி, உலக செவிலியர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாள் வாழ்த்துகள்.

எடப்பாடி பழனிசாமி.

தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி, ஆண் – பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துகள்.

வைகோ

உலகம் முழுமையும் இருக்கின்ற செவிலியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளின் தன்மை அறிந்து, இடம் அறிந்து, காலம் அறிந்து அவர்களைத் தேற்றும் கடமை ஆற்றுவதற்கு, எல்யைற்ற பொறுமை வேண்டும். தாய் உள்ளம் வேண்டும். அத்தகைய தாய்க்கு ஈடானவர்கள் செவிலியர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் களப்பணி ஆற்றி வருகின்றார்கள். புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்ற அனைவருக்கும்,வாழ்த்துகள்

செல்வப்பெருந்தகை

தன்னலம் கருதாமல் மக்களின் உயிர்காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்துடன் ஈடுபடுபவர்கள் செவிலியர்கள். நாளின் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு பராமரிப்பு மற்றும் ஆறுதலை வழங்குபவர்கள். இந்த நாளில், மருத்துவ நிறுவனங்களின் முதுகெலும்பாக இருக்கும் செவிலியர்களின் அயராத உழைப்பு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொண்டாடுவோம். செவிலியர்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மருத்துவத் துறையில் பணியாற்றும் அனைவரின் சேவைகளுக்கும், நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன்

மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்களாக, மக்களை பாதுகாப்பதில் அளப்பரிய அன்பு கொண்டவர்களாக, சேவை மனப்பான்மை மிக்க அன்னையர்களின் மறுபிறவியாக மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றிவரும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை போற்றிக் கொண்டாடும் உலக செவிலியர் தினம் இன்று. செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA K. ,Stalin ,Chennai ,World Nurses Day ,Florence Nightingale ,Dinakaran ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...