×

சென்னை மாநகராட்சியின் இரவு நேர காப்பக கட்டிடங்களை மருத்துவமனைகளாக்க திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரவு நேர காப்பக கட்டிடங்களை மருத்துவமனை கட்டிடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஆதரவற்ற ஆயிரக்கணக்கானோர் வீடின்றி சாலைகளில் வசித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் தினமும் வேலைக்காக சென்னைக்கு பல ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். இவர்களெல்லாம் எங்கு தூங்குவது என்று தெரியாமல் பேருந்து, ரயில் நிலையங்களில் தங்கி வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இப்படி கஷ்டப்படும் மக்களுக்கும், பெற்றோர்களால் கைவிடப்பட்டு குழந்தை தொழிலாளியாக உள்ளவர்களை மீட்டு அவர்களுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் இரவு நேர காப்பகம் தொடங்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 1 லட்சம் மக்கள் தொகைக்கு 1 காப்பகம் என நிர்ணயிக்கப்பட்டு இரவு நேர காப்பகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் மொத்தம் 83 இரவு நேர காப்பகங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது வெறும் 53 இரவு நேர காப்பகங்களே செயல்பட்டு வருகின்றன. இந்த 30 இரவு நேர காப்பகங்களும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால் தமிழக அரசானது இதற்கென தொடர்ந்து நிதியை வழங்கி வருகிறது. இந்த 53 இரவு நேர காப்பகங்களும் சென்னை மாநகராட்சியின் சொந்த இடங்களில் உள்ளது. 53ல் 2 இரவு நேர காப்பகத்திற்கு மட்டும் இடம் ஒதுக்கப்படாமல் மாதம் வாடகைக்கென ரூ.25000 சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படுகிறது.

இரவு நேர காப்பகத்திற்கு ஒரு கட்டிடத்திற்கென தமிழக அரசு ரூ.98 லட்சம் சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சியோ அதற்கென இடத்தை கூட ஒதுக்காமல் உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகளும் இடத்தை கண்டுபிடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்த வருடம் 3 காப்பகங்கள் கட்டப்பட்டு, மூடிய நிலையில் உள்ளது. அதில் 2 கட்டிடங்கள் இரவு நேர காப்பகங்களுக்கு வழங்காமல் பொது சுகாதார மருத்துவமனைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது மீதமுள்ள 30ல் 3 கட்டிடங்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளதாகவும் மீதி 27 கட்டிடங்களுக்கென இடத்தை மாநகராட்சி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை மாநகராட்சியின் இரவு நேர காப்பக கட்டிடங்களை மருத்துவமனைகளாக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை...