×

சென்னை விமானநிலையத்தில் மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் சிறப்புக்குழு

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களில் தாக்கக்கூடிய மிக்ஜம் புயலை எதிர்கொள்வது குறித்து நேற்றிரவு காணொலி காட்சி மூலமாக விமான நிலைய இயக்குநர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து புயலை எதிர்கொள்ள முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களில் மிக்ஜாம் புயல் தாக்கலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் மிக்ஜம் புயல் எதிர்கொள்வது குறித்து, சென்னை விமானநிலைய இயக்குநர் சி.வி.தீபக் தலைமையில் நேற்றிரவு காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை விமானநிலைய உயர் அதிகாரிகள், இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், அனைத்து ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான பாதுகாப்பு துறை அதிகாரிகள், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும்வரை, சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர், மிக்ஜம் புயல் கரையைக் கடந்து, சகஜநிலை ஏற்படும் வரையில் தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாயைத் தொடர்ந்து கண்காணித்து, அங்கு மழைநீர் தேங்காதபடி வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பணிகளுக்கு கூடுதல் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதோடு, கால்வாயில் அடைப்பு ஏதாவது ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு தேவையான உபகரணங்களும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

சென்னையை மிக்ஜம் புயல் தாக்கும்போது, விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, தங்களுடைய விமானங்களை புயல் துவங்கும் சில மணி நேரத்துக்கு முன்னதாகவே, சென்னை அருகே பெங்களூர், ஐதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்த அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்தில் புயல் பாதிப்பு இருக்கும் நேரங்களில் விமானங்கள் மட்டுமின்றி, விமான நிலையத்துக்குள் ஓடக்கூடிய பிக்-அப் வாகனங்கள், பயணிகளை அழைத்து செல்லும் வாகனங்கள், விமானத்தில் பயணிகளை இறக்க பயன்படும் ஏணிகள் உள்பட எந்தவொரு வாகனமும் விமானநிலைய ஓடுபாதையில் இயக்குவதற்கு அனுமதி கிடையாது. அதேபோல், மிக்ஜம் புயல் முழுமையாக கடக்கும்வரை, சென்னை விமானநிலையத்தில் எந்தவொரு விமானமும் இயக்கப்பட மாட்டாது.

அந்நேரங்களில் சென்னை விமானநிலையத்தில் தங்கியிருக்கும் பயணிகள், விமானநிலைய ஊழியர்கள், ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் உள்பட சென்னை விமானநிலையத்தை சார்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான உணவு, குடிநீர் வசதிகளை முன்னதாகவே செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், பயணிகள் தங்குவதற்கு கூடுதல் இடவசதி ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் புயல் நேரத்தின்போது மின்தடை ஏற்பட்டால், அவற்றை சமாளிக்க தேவையான ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், சென்னை விமானநிலையத்தின் பின்பகுதியில் ஓடும் அடையாறு ஆற்றின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு தனி சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அடையாறு ஆறு முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் சென்னை விமானநிலையம் அருகே ஓடும் அடையாறு ஆறு வழியாக வெளியேறும் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரால் பாதிப்பு ஏற்படாது என்று சென்னை விமானநிலைய அதிகாரிகளால் கூறப்படுகிறது. எனினும், அடையாறு ஆற்று நீரோட்டம் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

இதுதவிர, மிக்ஜம் புயல் தாக்குவதாக கருதப்படும் நாளை (4ம் தேதி மற்றும் நாளை மறுநாள் (5ம் தேதி) ஆகிய 2 நாட்களில் சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, விமான சேவைகளின் இயக்கத்தை உறுதிப்படுத்திய பிறகு பயணிகள் சென்னை விமான நிலையத்துக்கு வந்தால் போதும். அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்தால், குறிப்பிட்ட நேரத்தில் விமானங்கள் தாமதமின்றி புறப்பட்டு செல்ல வசதியாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகள் பெறப்பட்டு, அவை அனைத்து ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ப தங்களுடைய விமானங்களின், இயக்கங்கள் பற்றி சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், புயல் கரையைக் கடக்கும்வரை, இதுபோன்ற அவசர ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, விமானநிலையத்தில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவது, புயல் கரையை கடக்கும்வரை அனைத்து ஊழியர்களும் விடுப்பு இல்லாமல் பணிக்கு வரவேண்டும் என அனைத்து துறையினரும் அறிவுறுத்தப்பட்டு உள்னளர் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post சென்னை விமானநிலையத்தில் மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் சிறப்புக்குழு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Mikjam ,Chennai ,Special Committee ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூர்...