- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
- சென்னை
- உத்திரப்பிரதேசம்
- தண்டாயர்பேட்டை
- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
தண்டையார்பேட்டை: காதல் விவகார மோதலில் மருத்துவ மாணவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக உத்தரபிரதேச வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் காஜன் யாதவ் (25). இவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். அதே மருத்துவக்கல்லூரியில் வேலூரை சேர்ந்த ரோகன் என்பவர் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், ரோகனுக்கும், காஜன் யாதவும் காதலித்து வந்துள்ளனர். இதில் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை காதலியான காஜன் யாதவ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காஜன்யாதவின் முன்னாள் காதலன் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமித்குமார் செல்போனில் தொடர்புகொண்டு கண்டித்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று தனது நண்பர் ரித்திஷ்குமாருடன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அமித்குமார் வந்துள்ளார். இரவு பணியின்போது டீகுடிப்பதற்காக ரோகன் வெளியில் வந்துள்ளார். அப்போது எதிர்பார்த்து காத்திருந்த அமித்குமார் தயாராக கொண்டு வந்த நாட்டு துப்பாக்கியால் ரோகனை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், ரித்திஷ்குமாரை மடக்கி பிடித்து பூக்கடை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதில், அமித்குமார் சென்ட்ரல் ரயில்நிலையம் தப்பி சென்று ரயில் மூலம் சொந்தஊருக்கு சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரித்திஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து விஜயவாடாவில் பதுக்கியிருந்த அமித்குமாரை கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு; மருத்துவ மாணவர் மீது துப்பாக்கிசூடு: உத்தரபிரதேச வாலிபர் 2 பேர் கைது appeared first on Dinakaran.