×

வடசென்னை வளர்ச்சி பணிக்கு சென்னை காவல்துறை மேம்பாட்டு நிதியில் ரூ.54.36 கோடி ஒதுக்கீடு: கொளத்தூர், பெரவள்ளூர் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம்


சென்னை: வட சென்னை வளர்ச்சி பணிக்காக உள்துறை ஒதுக்கீடு மூலம் சென்னை பெருநகர காவல்துறை மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.54.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின்படி உள்துறை ஒதுக்கீடு மூலம் சென்னை பெருநகர காவல்துறை மேம்பாட்டிற்காக தேவையான வசதிகளை வழங்கிட நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, வடசென்னை பகுதியில் 45 இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவிட ரூ.9.16 கோடியும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் ரோந்து பணிக்காக 60 புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வாங்க ரூ.90.6 லட்சமும், குடிசை வாழ் புகுதிகளில் இளைஞர்களின் கல்வி திறன் மற்றும் விளையாட்டு திறன் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் 10 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் அமைத்திட ரூ.60 லட்சமும், போதை பொருட்கள் நுகர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக மறுவாழ்வு மையங்கள் அமைத்திட ரூ.2.95 கோடியும், பணியின் நிமித்தமாக வந்து செல்லும் காவல் துறையினர் தங்கிச் செல்வதற்காக காவலர் தங்கும் விடுதிகள் அமைத்திட ரூ.9.75 கோடியும்,

கொளத்தூர் காவல் நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.16 கோடியும், பெரவள்ளூர் காவல் நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 7 காவல்துறை பயன்பாட்டுக்குரிய திட்டங்களுக்கு ரூ.54.366 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், வட சென்னை பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்காணக்கான பொதுமக்களும் பயனடைவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வடசென்னை வளர்ச்சி பணிக்கு சென்னை காவல்துறை மேம்பாட்டு நிதியில் ரூ.54.36 கோடி ஒதுக்கீடு: கொளத்தூர், பெரவள்ளூர் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,North Chennai ,Kolathur ,Peravallur ,Home Ministry for North ,Chennai Metropolitan Police ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai Metropolitan Police… ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மலை நகரில் மாலை...