×

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனத்தால் காவிரி நீர் கடலுக்குச் செல்லும் அவலம்

*விவசாயிகள் குற்றச்சாட்டு

காரைக்கால் : மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடந்த 31ம் தேதி அங்கிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்ட எல்லையான நல்லம்பல் பகுதி தடுப்பு அணைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து விவசாய பாசனத்திற்காக திருநள்ளாறு தொகுதி எம்எல்ஏ சிவா மற்றும் கலெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நல்லம்பல் நூலாறு சட்ரஸ்சுக்கு வந்த காவிரி நீரை, கடைமடை குறுவை பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீரில் நெல்மணி, நவதானியங்கள் மற்றும் மலர் தூவி காவிரி நீரை வரவேற்றனர்.

காவிரி நீர் திருநள்ளாறு, சேத்தூர், தென்னங்குடி, அத்திபடுகை, அகலங்கன்னு, உள்ளிட்ட சுற்றுவட்டார விவசாய பகுதிகளுக்கு சென்று இறுதியாக கடலை அடையும். சுமார் 580 கன அடிக்கு காரைக்கால் பகுதிக்கு காவிரி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரி அமைக்கப்படாத காரணத்தினால் காவிரி நீர் நேரடியாக கடலை சென்று அடைகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து கடமடை விவசாய சங்க தலைவர் சுரேஷ் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் கிடைப்பதில் பெரும் சிரமப்பட்டு வரும் நிலையில் கிடைத்த உபரி நிறையும் ஏரிகளில் சேமிக்காமல் அதிகாரிகளின் மெத்தனபோக்கால் கடலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாய பாசனத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீரை நீர்நிலைகளில் சேமிக்காமல் நேராக கடலுக்கு காவிரி நீர் செல்வதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையிலும் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டதால் வரும் நாட்களில் காரைக்கால் மாவட்டத்திற்கு நீர்வரத்தும் குறைந்துவிடும். காவிரி நீர் வரவில்லை எனக் கூறும் புதுச்சேரி அரசு நீரை பாதுகாக்க வழி வகை செய்யாத காரணத்தினால் நேரடியாக கடலுக்கு செல்கிறது.

பொதுப்பணித்துறை, நீர் பாசன துறை அதிகாரிகள் முறையாக வந்த உபரி காவிரி நீரையும் திறம்பட கையாளாகாததால் கடலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் முறையாக செயல்படாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய புதுச்சேரி அரசு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனத்தால் காவிரி நீர் கடலுக்குச் செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Public Works ,Karaikal ,Mattur Dam ,Delta districts ,Dinakaran ,
× RELATED குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால்...