×

மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பாராட்டு

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது என்று நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கோயிலில் வழிபடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி., ஐ.ஜி. உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள்; அழகர் மலையில் இருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க வழிநெடுகிலும் வீதி வீதியாக வருகிறார்.

அனைத்து மக்களும் கள்ளழகரை தூக்குகிறார்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். அதிகமான இடங்களில் அன்னதானம், நீர் மோர் வழங்குகிறார்கள்; இதில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது. மதுரை சித்திரை திருவிழாவைப் போல் அனைத்து இடங்களிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கலாமே. சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; மரியாதை என்பது தானாக வர வேண்டும். அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றமே எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; எந்த சாதிய பாகுபாடும் இல்லை; வேறுபாடுகளை களையும் வகையிலேயே காலனி பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை உள்ளது. வழக்கு தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை; புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய நீதிபதிகள்; இன்னும் சில ஊர்களில் சிலர் சட்டை அணிந்து செல்ல முடியவில்லை; தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை. நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளான பின்னரும் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

புகார் பெறப்பட்டவுடன் தனிப்பட்ட முறையில் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று கரூர் ஆட்சியருக்கு கேள்வி எழுப்பினார். தீண்டாமை புகார்கள் வராததால் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆட்சியர் கூறுவது ஏற்புடையதல்ல. மாறு வேடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திருந்தால் உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும். சாதிய பாகுபாடுகளை களைய மாவட்ட ஆட்சியர்கள் பாடுபட வேண்டும். மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

The post மதுரை சித்திரை திருவிழாவில் எங்கேயும் சாதிய பாகுபாடு கிடையாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Madurai Chithirai festival ,Madurai ,Karur ,Justices ,Velmurugan ,KK Ramakrishnan… ,Court ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...