×

கார் ஏற்றி கொல்ல முயன்றதாக பொய் சொன்ன வழக்கு மதுரை ஆதீனம் 5ம் தேதி ஆஜராக 2வது முறையாக சம்மன்: ஆஜராகாதபட்சத்தில் கைது செய்யப்படலாம் என தகவல்

சென்னை: சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 5ம் தேதி அனைத்துலக வைச சித்தாந்த மாநாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை ஆதீனம் செய்து இருந்தார். மாநாட்டிற்கு மதுரை ஆதீனம் சாலை மார்க்கமாக தனது காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே நான்கு முனை இணைப்பு சாலையை கார் கடக்கும் வேறு திசையில் மற்றொரு கார் மதுரை ஆதீனம் வந்த கார் மீது மோதுவதுபோல் வந்தது. இதில், நல்வாய்ப்பாக மதுரை ஆதீனம் விபத்து நடக்காமல் உயிர்தப்பினார்.

அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் பேசுகையில், ‘நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். தருமை ஆதீனம் ஆசிதான் என்னை காப்பாற்றியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பொருமான்தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிற்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகிவிட்டது’ என்று பேசி இருந்தார். இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணை நடத்திய போது, மதுரை ஆதீனத்தின் கார் தான் அதிவேகமாக செல்வது போன்றும், மறுமுனையில் இருந்து வந்த கார் பிரேக் பிடித்ததால் விபத்து நடக்காமல் மதுரை ஆதீனத்தின் கார் தப்பியது தெரியவந்தது. அதன்பிறகு விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

ஆனால், மதுரை ஆதீனம் அந்த காரில் மற்றொரு மதம் சார்ந்த நபர்கள் இருந்ததால், திட்டமிட்டு தன்னை கொலை செய்ய முயன்றது போன்று மதுரை ஆதீனம் பொய் பேசியது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மதுரை ஆதீனத்தை கொலை செய்யும் வகையில் எந்த சம்பவங்களும் நடைபெற வில்லை என்று சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் நடத்தப்பட்ட விசாரணை மூலம் உறுதியானது. இதைதொடர்ந்து சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் மதுரை ஆதீனம் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு வேறு சமூகங்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறான தகவல்களை பரப்புதல் என 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதன்பிறகு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மதுரை ஆதீனத்திற்கு கடந்த 30ம் தேதி சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மதுரை ஆதீனம் நேரில் ஆஜராகவில்லை. அதற்கு எந்த விளக்கமும் அவர் சார்பில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் மீண்டும் 2வது முறையாக வரும் 5ம் ேததி நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்மனை தொடர்ந்து மதுரை ஆதீனம் நேரில் ஆஜராக வில்லை என்றால், அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக சட்ட வல்லுநர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

The post கார் ஏற்றி கொல்ல முயன்றதாக பொய் சொன்ன வழக்கு மதுரை ஆதீனம் 5ம் தேதி ஆஜராக 2வது முறையாக சம்மன்: ஆஜராகாதபட்சத்தில் கைது செய்யப்படலாம் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai Atheenam ,Chennai ,Vaish Siddhanta ,Kattankolathur, Chennai ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!