நெல்லை : நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்வாய், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கார்சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் 115.45 அடியும், மணிமுத்தாறு 70.59 அடியும், சேர்வலாறு 120.77 அடியும் நீர் இருப்பு உள்ளது. இதனால் கடந்த மாதம் கார் சாகுபடி பணிக்காக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்களான வடக்கு, தெற்கு கோடைமேலழகியான், கன்னடியன், நெல்லை, பாளையங்கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் இந்த கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் குளங்கள் நிரம்பி காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தின் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கார் சாகுபடி பணிகளை துவக்கி விட்டனர். அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மேலச்செவல், தருவை, முன்னீர்பள்ளம், முக்கூடல், அரியநாயகிபுரம் கோபாலசமுத்திரம், பத்தமடை, ராஜவல்லிபுரம், பொட்டல் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலத்தை உழவு செய்து, திருத்தி தண்ணீர் நிரப்பி நாற்று பாவுதல், நாற்றுக்களை நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் பெறும் பகுதியான நெல்லை டவுன் பெரியகுளம் நிரம்பி காணப்படுகிறது. இக்குளத்தில் இருந்து பாசன வசதி பெறும் கண்டியப்பேரி, ரெங்கநாதபுரம், ராஜாஜிபுரம், கோட்டையடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெற்பயிர் நாற்றுக்களை நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக விதைக்கப்பட்ட நாற்றுக்களை எடுத்து நடவு செய்ய வேண்டி சிறிய சிறிய கட்டுக்களாக கட்டி வைத்து வயல்களில் நாற்றுக்களை நட்டு வருகின்றனர்.
The post கால்வாய்களில் தண்ணீர் திறப்பு நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.