×

பஸ்-டூவீலர் மோதல் தம்பதி, மகன் சாவு

நத்தம்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உசிலம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (40), லாரி டிரைவர். மனைவி பஞ்சு (30). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன். இந்நிலையில் முருகன், மனைவி பஞ்சு, மகன் ஸ்ரீதருடன் (6) திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள நேற்று காலை டூவீலரில் சென்றார். நத்தம் – மதுரை நான்கு வழிச்சாலையில் முடக்குச்சாலை என்ற பகுதியில், ஒரு வளைவில் எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மீது டூவீலர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் டிரைவர் காயமின்றி தப்பினர். பெற்றோரையும், தம்பியையும் இழந்த 4 பெண் குழந்தைகளும் தவிப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* பைக் மோதி பெண் போலீஸ் பலி ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பெரியநாயகிபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகள் சுபபிரியா (23). தஞ்சை ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் அருகே கண்ணமுடையார் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பணி முடிந்து, போலீசார் தங்கியுள்ள திருமண மண்டபத்துக்கு சக போலீசாருடன் ரெட்டவயல் சாலையில் சுபபிரியா நடந்து சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி (42) ஓட்டி வந்த பைக் மோதியதில் தலையில் காயமடைந்த சுபபிரியாவை சக போலீசார் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெண் காவலர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். சுபபிரியா உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சுபபிரியா இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறி உள்ளார்.

The post பஸ்-டூவீலர் மோதல் தம்பதி, மகன் சாவு appeared first on Dinakaran.

Tags : Natham ,Murugan ,Usilampatti ,Alankanallur ,Madurai district ,Panchu ,Panju ,Sridhar ,Nattha, Dindigul district ,
× RELATED கிராம மக்கள் சாலை மறியல்