×

பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலை பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சாதாரண பேருந்துகளில் புறநகர் பகுதிகளில் 10 கிலோமீட்டருக்கு ரூ.6 எனவும், விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோமீட்டருக்கு ரூ.24 எனவும், சொகுசு இடைநில்லா பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோமீட்டருக்கு ரூ.27 எனவும், குளிர்சாதன பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோமீட்டருக்கு ரூ.42 எனவும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

2018ம் ஆண்டுக்கு பின்னர் டீசல் மற்றும் பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்து இருக்கும் நிலையில், இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களிடம் தற்போது கருத்து கேட்கப்பட உள்ளது. தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க, போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை, ஈரோடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை கட்டண உயர்வு கோரி தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், டீசல், உதிரிப் பாகங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை பொறுத்து கட்டணத்தை உயர்த்தக் கூடிய குறியீட்டு முறையை மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அனைத்து நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இதற்காக சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து அல்லது தபால் மூலமாக தங்கள் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை செயலாளர்/போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு அனுப்பலாம். tc.tn@nic.in அல்லது தபால் மூலமாகவோ 3 வாரத்திற்குள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Tamil Nadu ,department ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...