மும்பை: ‘புல்டோசர் கொண்டு இடிப்பது உங்களின் வழக்கம். இந்தியா கூட்டணி ஆட்சியில் அரசியலமைப்பு சட்டத்தில் கூறியபடி நாங்கள் மத சுதந்திரத்தை பாதுகாப்போம்’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திரபவார்) தலைவர் சரத் பவார், சிவசேனா (யுபிடி அணி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:
இதற்கு முன் எந்த ஒரு பிரதமரும் மோடியைப் போல மக்களை தூண்டிவிடும் பிரசாரத்தை செய்ததில்லை. மூச்சுக்கு முந்நூறு தடவை ஜனநாயகம் பற்றி பேசுகிறார். ஆனால் ஜனநாயகத்தின் கொள்கைகளை கடைபிடிக்க மறுக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள், 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவார்கள் என மோடி பொய்களை அள்ளி வீசுகிறார். இதற்கு முன் நாங்கள் யாரிடமும் புல்டோசர் பயன்படுத்தியதில்லை. அந்த பழக்கம் மோடிக்குதான் இருக்கிறது. அவர், காங்கிரஸ் ஒருபோதும் செய்யாத, செய்ய முடியாத விஷயங்களைப் பற்றி பொய் சொல்லி மக்களை தூண்டிவிடுகிறார்.
எங்கு சென்றாலும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். சமூகத்தை பிளவுபடுத்த வேண்டும் என்றே பேசுகிறார். சட்டப்பிரிவு 370 குறித்து மோடிக்கு நான் பதில் சொல்ல முடியாது. எங்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீடு தொடரும். அதை யாரும் தொட முடியாது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாங்கள் ஒற்றை விகித எளிமையான ஜிஎஸ்டியை அமல்படுத்துவோம். உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம். இவ்வாறு கார்கே பேசினார்.
The post புல்டோசர் மூலம் இடிப்பது உங்கள் பழக்கம்; இந்தியா கூட்டணி ஆட்சியில் மத சுதந்திரம் பாதுகாக்கப்படும்: பிரதமர் மோடி மீது கார்கே தாக்கு appeared first on Dinakaran.