×

வெண்கலம் வென்றார் ஸ்வப்னில்: இந்தியாவுக்கு 3வது பதக்கம்

பாரிஸ்: ஒலிம்பிக் ஆண்கள் துப்பாக்கிசுடுதல் 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும், மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சுடுதலில் நேற்று இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு பைனலில் பங்கேற்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே (28 வயது, புனே) 451.4 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். அதன் மூலம் இந்தியாவுக்கு 3வது பதக்கமும் துப்பாக்கிச்சுடுதலிலேயே கிடைத்தது. இப்போட்டியில் சீன வீரர் யுகுன் லியூ (463.6) தங்கம், உக்ரைன் வீரர் செர்ஹியூ குலிஷ் (461.3) வெள்ளி வென்றனர்.

ஒலிம்பிக் பதக்கம் வென்று சாதனை படைத்த ஸ்வப்னில், ‘இப்போது மிகுந்த உணர்ச்சிவயப்பட்டு இருக்கிறேன். இந்த பதக்கம் அர்த்தம் மிகுந்தது. இது தங்கப்பதக்கம் அல்ல என்றாலும், பதக்கம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. அது நனவாகி உள்ளது’ என்று கூறியுள்ளார். பதக்கம் வென்ற ஸ்வப்னிலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.

* ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஷிண்டே
ஸ்வப்னில் குசாலே மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்பால்வாடியைச் சேர்ந்தவர். இவர் வெண்கலம் வென்றதைப் பாராட்டி இவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று அறிவித்தார். இவரது வெற்றி மாநிலத்தைப் பெருமைப் படுத்தியுள்ளது, என்றார்.

ஸ்வப்னில் மத்திய ரயில்வே புனே மண்டலத்தில் டிக்கெட் பரிசோதகராக பணி புரிகிறார். எனவே, இவரது வெற்றியை மத்திய ரயில்வேயும் பாராட்டியுள்ளது. போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, அவரை போனில் அழைத்து தொந்தரவு செய்யவில்லை என ஸ்வப்னிலின் தந்தை சுரேஷ் குசாலே கூறினார்.

* காலிறுதிக்கு முன்னேறினார் லக்‌ஷியா
ஒலிம்பிக் பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்திய வீரர் லக்‌ஷியா சென் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் ஆப் 16) இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிராணாய் – லக்‌ஷியா சென் மோதினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த லக்‌ஷியா 21-12 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 21-12, 21-6 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்திய வீரர்கள் மோதிய விறுவிறுப்பான இப்போட்டி 39 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. உலக தரவரிசையில் லக்‌ஷியா 22வது இடத்திலும், பிரணாய் 13வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் பேட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறிய 3வது இந்திய வீரர் என்ற சரித்திர சாதனை லக்‌ஷியா வசமாகியுள்ளது. முன்னதாக, பாருபள்ளி காஷ்யப் (2012, லண்டன்), கிடாம்பி ஸ்ரீகாந்த் (2016, ரியோ) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

* மகளிர் பாக்சிங்கில் ஆண்! வெடித்தது சர்ச்சை
ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் நேற்று களமிறங்கிய இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவை சேர்ந்த இமேன் கெலிப் உடன் மோதினார். இமேன் கெலிப் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றபோது பாலின சோதனையில் ‘டெஸ்டோஸ்டிரோன்’ அதிகமாக இருந்ததால் ஆண் என உறுதி செய்யப்பட்டதால், மகளிர் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்பட்டவர்.

ஆனால், பாரிஸ் ஒலிம்பிக்கில் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொடக்கத்திலேயே இமேன் கெலிப் விட்ட ஒரு பலமான குத்து ஏஞ்சலா கரினியை நிலைகுலைய வைக்க, 46வது விநாடியிலேயே போட்டியில் இருந்து விலகினார் ஏஞ்சலா. இமேன் வென்றதாக நடுவர் அறிவித்த நிலையில் அவருடன் கை குலுக்கக் கூட மறுத்து வெளியேறிய ஏஞ்சலா மண்டியிட்டு அமர்ந்து கதறி அழுதார். இப்படி மகளிர் பிரிவில் ஒரு ஆண் வீரர் பங்கேற்க எப்படி அனுமதிக்கலாம் என சர்ச்சை வெடித்துள்ளது.

The post வெண்கலம் வென்றார் ஸ்வப்னில்: இந்தியாவுக்கு 3வது பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Swapnil ,India ,Paris ,Swapnil Kusale ,Olympic ,Olympics ,Manu Bakar ,Dinakaran ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது