×

மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைக்க 42 பேருக்கு தலா ரூ.30 கோடி கொடுத்தது லஞ்சம் இல்லையா?: பாஜவுக்கு சீமான் கேள்வி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அனைவரும் கூறுகின்றனர். கொள்கையை விட்டு என்ன கூட்டணி? கொள்கையை விட்டு கூட்டணி என்பது புது விளக்கமாக இருக்கிறது. 10 பாவங்களை காந்தி கூறுகிறார். அதில் ஒன்று கொள்கையில்லாத அரசியல். ஒவ்வொருவரும் தனித்தனியாக கட்சி ஆரம்பித்தது எதற்காக? ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உள்ளது. அந்த கொள்கையை நிறைவேற்றத்தானே? அந்த கொள்கையை விட்டு கூட்டணி சேருவது கட்சியை அவமதிப்பதாகும். கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்தால் அது நியாயமாகி விடுமா? உண்மையான கொள்கை நோக்கம்தான் வழி நடத்தும்.

அதை விட்டு தேர்தல் நேரத்தில் கொள்கையை விடுவது எதற்காக? பாஜ ஊழலுக்கு எதிரான கட்சி என்கின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து 42 பேரை தூக்கி விட்டனர். ஒரு ஆளுக்கு 30 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இது லஞ்சம் இல்லையா? இதுபோன்று எவ்வளவோ உதாரணங்கள். இரட்டை இலைக்கு காசு கொடுத்தவர் டிடிவி, அவரோடு பாஜ கூட்டணி வைத்துள்ளது. அப்படி என்றால் ஊழல் இல்லாத கட்சி என்று சொல்வது எப்படி? கட்சியை காப்பாற்றுவதையே லட்சியமாக கொண்டுள்ளனர். இந்தியாவை யார் ஆளுவது என்ற நிலைப்பாட்டில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டை யார் ஆளுவது என்று பாஜ நினைத்து கூட்டணி வைத்தால் அது அதிமுகவிற்கு தேவையற்ற சுமைதான்.இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைக்க 42 பேருக்கு தலா ரூ.30 கோடி கொடுத்தது லஞ்சம் இல்லையா?: பாஜவுக்கு சீமான் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Shiv ,Seeman ,BJP ,Karaikudi ,Naam Tamilar Party ,Karaikudi, Sivaganga district ,Shiv Sena ,Maharashtra ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்