×

மூளையின் முடிச்சுகள் எதிர்மறை உணர்வுகளில் ஆரோக்கியம்

நன்றி குங்குமம் தோழி

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

இன்றைக்கு இயல்பாக கோபப்பட்டாலும், கத்தினாலும் டாக்சிக் ரிலேஷன்ஷிப் என்று கூற மக்கள் பழகியிருக்கிறார்கள். உண்மையில் டாக்சிக் என்ற வார்த்தையிலுள்ள எதிர்மறை எண்ணங்களைப் பற்றி முதலில் நாம் இங்கு தெரிந்து கொள்வோம். மனிதர்கள் வாழ்நாளில் எதிர்மறை உணர்வுகளை எதிர்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை நிறைவு செய்ய முடியாது. ஆனால் அந்த எதிர்மறை உணர்வுகளை எப்படி நாம் ஆரோக்கியமாக கையாள்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

மனிதர்களுக்கு ஆறு வகையான முதன்மையான உணர்வுகள் உள்ளது. இதில் நேர்மறையான உணர்வுகள் மற்றும் எதிர்மறையான உணர்வுகள் என இரண்டு பிரிவு உண்டு. நமக்கு ஏற்படும் உணர்வுகளில் எது நல்ல உணர்வுகள், எது கெட்ட உணர்வுகள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சி, அன்பு, நம்பிக்கை போன்றவை நேர்மையான மற்றும் ஆரோக்கியமான உணர்வுகள் ஆகும்.

எதிர்மறை உணர்வுகள் என்று பார்த்தால் பயம், கவலை, கோபம் போன்ற உணர்வுகள் ஆரோக்கியமற்ற உணர்வுகளாகவும், எதிர்மறை உணர்வுகளாகவும் இருக்கிறது. மேற்கூறிய உணர்வுகளின் அடிப்படையில் நீங்கள் எந்த உணர்வு நிலையில் இருக்கின்றீர்கள், அந்த உணர்வு நல்ல உணர்வா அல்லது கெட்ட உணர்வா, அந்த உணர்வு இப்போது வருவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்குள் ஏற்படும் உணர்வு மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, எந்த உணர்வு நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு சிறந்த முறையில் மேலாண்மை செய்வதற்கு இந்தப் பயிற்சி நமக்கு உதவும். முக்கியமாக இன்றைக்கு அனைத்து தொழிற்சாலைகளிலும், கல்வி நிலையங்களிலும் நம்முடைய EQ சார்ந்துதான் பல கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

இதன் உண்மையான அர்த்தம்,மேலே குறிப்பிட்டுள்ள உணர்வுகள் உங்களுக்கு எப்பொழுது எல்லாம் ஏற்படும் என்பதை நீங்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருப்பது அவசியமானது. எந்தமாதிரியான செயல் உங்களை கவலை மற்றும் கோபம் கொள்ளச் செய்கின்றது. எதுவெல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது, எந்தமாதிரியான செயலைச் செய்யும்பொழுது நீங்கள் மகிழ்ச்சியை உணர்கிறீர்கள் போன்ற அடிப்படை விஷயங்களை சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சியை மனக்கணக்கு போடுவதுபோல மனதில் செய்வதைவிட எழுதிப்பார்ப்பது கூடுதலாக சிறந்தது. அப்போதுதான் முழுமையாக உங்கள் உணர்வை புரிந்து, அழகாக அதனைக் கையாள முடியும். இதன் அடுத்த கட்டம்தான் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது. இதிலும் நீங்கள் தேர்ந்துவிட்டால் சிறந்த (EQ)உணர்திறன் உள்ள நபராக மாறிவிடுவீர்கள்.

உதாரணத்திற்கு, கோபம் வெளிப்படுவதற்கான காரணம், பிறர் நம் எல்லையை மீறி செயல்படுவதால் ஏற்படும். இதுபோன்று ஒவ்வொரு உணர்வும் வெளிப்படுவதற்கான அடிப்படை காரணங்கள் கணடிப்பாக அனைவருக்குள்ளும் இருக்கிறது. இதில் கோபம், பயம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பார்த்தால், உலகமயமாக்கலின் நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தனி நபரின் சுதந்திரத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்த நாளில் இருந்தே ஆரம்பித்து, பல்வேறு விதமாக அவர்களுக்கான எல்லைகளை மனிதர்கள் மனதளவில் அவர்களுக்குள் விதிக்க ஆரம்பித்து விட்டார்கள். விளைவு சிறிதளவில் மனிதர்களை தொந்தரவு செய்வது போல் இருந்தாலும், சிலருக்கு அதிகமாக கோபம் மற்றும் பயம் வருகிறது.

உதாரணத்திற்கு நமக்குத் தெரிந்தவர்கள் கோபப்படும் போது மொபைலை உடைப்பதும், கையில் கிடைக்கும் சில பொருட்களை தூக்கி எறிவதும், கத்தி அழுவதும் அல்லது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும் என்றும், இம்மாதிரியான பழக்கம் உள்ளவர்களாக சிலர் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் நமக்கு கோபம் வரும் போது, நாம் என்ன மாதிரி நடந்து கொள்கிறோம் என்ற புரிதல் முதலில் நமக்கு இருப்பது மிக அவசியமானது.

கோபம், பயம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றது அல்லது அதிகளவில் ஏற்படுகின்றது. இதனால் தினசரி செயல்பாடுகள் மற்றும் நமது நெருங்கிய உறவுகளிடையே மனக்கசப்பை ஏற்படுத்துகின்றது. நாம் செய்யும் வேலை மற்றும் இடத்தைப் பாதிக்கின்றது என நீங்கள் உணர்ந்தால் அந்த எதிர்மறை உணர்வு என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை புரிந்து அறிந்து, அதை சரி செய்வதற்கான செயல்பாடுகளில் இறங்க வேண்டும். இது போன்ற உணர்வு ஏற்படுகின்றது என்ற புரிதலே குறிப்பிட்ட உணர்வை 50% சமாளிக்க உதவும். இதன் பின்னரும் உங்கள் உணர்வுகளைச் சமாளிப்பதில், கையாள்வதில் பிரச்னைகள் காணப்பட்டால் மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரின் உதவியை பெறுவது நல்லது. பயம், கவலை, கோபம் போன்ற உணர்வுகள் எதிர்மறையானதுதான். ஆனால் ஒரு மனிதனுக்கு இந்த உணர்வுகள் ஏற்படவே கூடாது என்றெல்லாம் இல்லை.

உதாரணமாக கோபத்தில் செல்போனை தரையில் கீழே போட்டு உடைக்கும் நபர்களும் இருக்கிறார்கள், ஒரு சிலர் தரையில் போடாமல் சோபா அல்லது மெத்தையில் பாதுகாப்பாக எறியவும் செய்வார்கள், வேறு சிலர் கோபத்தில் செல்போனை ஓங்கிவிட்டு, கீழே போட்டால் உடைந்துவிடும் என்பதை உணர்ந்து மீண்டும் உள்ளே வைத்துக் கொண்டு வேறு வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள்.

இதில் நீங்கள் எந்த ரகம்?

உங்களுக்கு கோபமோ, வருத்தமோ வரும் போது, செல்போனை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள். உணர்வுகளை கையாள்வதில் கவனமாக இருங்கள். அதேபோல் உங்களுக்கு ஏற்படும் எதிர்மறையான உணர்வுகளை ஆரோக்கியமானதாக மாற்றவும் கற்றுக் கொள்ளுங்கள். அதாவது உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்துவதும் தவறு, உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதிற்குள் அடக்கி வைப்பதும் தவறு.

குடும்ப நபர்களோ அல்லது நெருங்கிய உறவுகளோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபரின் சுதந்திரத்தில் எல்லை மீறுவதும், அதிக உரிமை எடுப்பதும், அதனால் ஏற்படும் சில விஷயங்களை தவிர்க்க முடியாமல் இருப்பதும் இயல்பானதுதான். அதற்காக எதிர்மறை உணர்வுகளை டாக்சிக் என்று ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை என்ற புரிதலே மிகவும் தேவையானது.

The post மூளையின் முடிச்சுகள் எதிர்மறை உணர்வுகளில் ஆரோக்கியம் appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi Gayatri Mahathi ,
× RELATED மூளையின் முடிச்சுகள் எண்ணங்களின் வெளிப்பாடு