சென்னை: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்த நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.இதற்காக அவர் இன்று காலை 6.15 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி தொகுதி பாஜ வேட்பாளர் சி.நரசிம்மனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ஓசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு பிற்பகல் 12.35 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜ வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பேசுகிறார்.
தொடர்ந்து அவர் தஞ்சாவூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு மாலை 4 மணியளவில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று பாஜ வேட்பாளர் எம்.முருகானந்தத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து நாளை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நீலகிரியில் மின்ரேகா தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்.
மேலும் நீலகரி தொகுதி பாஜ வேட்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக வாக்குகளை கேட்கிறார். நாளை மாலை 4 மணியளவில் கோவையில் ரோடு ஷோ நடக்கிறது. இதில் பாஜ வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணியளவில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு கோவை வரும் நிர்மலா சீதாராமன் நாளை இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
The post பாஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் இன்றும், நாளையும் நிர்மலா சீதாராமன் பிரசாரம்: பொதுக்கூட்டம், ரோடு ஷோவில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.