×

பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியல் திருத்தம் முக்கிய பிரச்னையாக மாறும்: சிபிஐ(எம்எல்) கருத்து

புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புதிருத்தம் சட்டமன்ற தேர்தலில் முக்கியப் பிரச்னையாக எதிரொலிக்க கூடும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். பீகாரில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடந்து வருகின்றது. இதன் மூலமாக சுமார் 2கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கூறுகையில், கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்ற விவகாரம் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது. தற்போது தேர்தல் ஆணையமானது முக்கிய கதையை களத்துக்கு கொண்டுவந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது சட்டமன்ற தேர்தலின்போது முக்கிய பிரச்னையாக மாறக்கூடும். அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் சிறப்பு திருத்தம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையானது சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்றது. பீகாரில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர்.

இது வாக்குரிமை பறிப்பை குறிக்கிறது என்று அவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். நாங்கள் அந்த மக்களின் குரலை ஆதரிக்கப் போகிறோம். வருகிற 9ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது வாக்களிக்கும் உரிமை ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கும். பீகார் இந்த விவகாரத்துக்கு தீவிரமாக பதிலளிக்கும். வெகுஜன போராட்டம் தான் ஜனநாயகத்தில் எஞ்சியிருக்கும் ஒரே வழியாகும்” என்றார்.

* ‘பாஜ மதசார்பற்றது’

டெல்லியில் பேசிய ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘பாஜ மத சார்பற்றது. காங்கிரஸ் மிகவும் வகுப்புவாதமானது. இந்தியாவை போல சிறுபான்மையினருக்கு அதிக வசதிகளை வழங்கும் நாடு உலகில் வேறு எங்கும் இல்லை. இங்கு அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள். நாட்டில் 6 சிறுபான்மை சமூகங்கள் மட்டுமே உள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் மற்றும் வேறு சில கட்சிகள் சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அவர்கள் சிறுபான்மையினரை தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிக்க கூடாது” என்றார்.

The post பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியல் திருத்தம் முக்கிய பிரச்னையாக மாறும்: சிபிஐ(எம்எல்) கருத்து appeared first on Dinakaran.

Tags : Bihar assembly ,CPI ,New Delhi ,Bihar ,ML ,Liberation General Secretary ,Dipankar Bhattacharya ,assembly ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...