×

2022ம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களை படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு பரிசு: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

சென்னை: தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த நூல் பரிசு திட்டத்தின் வாயிலாக 33 வகைப்பாடுகளில் நூல்கள் பெறப்பட்டு ஒவ்வொரு நூலையும் மூன்று அறிஞர்களை கொண்டு மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்ட நூலை எழுதிய நூலாசிரியருக்கு ரூ.30,000மும், நூலை பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ.10,000மும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2022ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த நூல் பரிசு திட்டத்தின்கீழ் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்ட மரபுக் கவிதை எனும் வகைப்பாட்டில் ராமானுச மாமுனிவர் காவியம் எனும் நூலை எழுதிய கரு.நாகராசன், பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும், புதுக் கவிதை எனும் வகைப்பாட்டில் புண் உமிழ் குருதி எனும் நூலை எழுதிய சின்னசாமி, பதிப்பித்த உயிர்மை பதிப்பகத்தாருக்கும், புதினம் எனும் வகைப்பாட்டில் குரவை எனும் நூலை எழுதிய சிவகுமார், பதிப்பித்த யாவரும் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தாருக்கும்,

சிறுகதை எனும் வகைப்பாட்டில் பெரிய வாய்க்கா தெரு எனும் நூலை எழுதிய அன்பழகன், பதிப்பித்த டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தாருக்கும், நாடகம் எனும் வகைப்பாட்டில் புகழ் அமுதம் 2022 எனும் நூலை எழுதிய மாணிக்கவாசகன், பதிப்பித்த உமா பதிப்பகத்தாருக்கும், சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் சிறார் நலம் தேடு எனும் நூலை எழுதிய கந்தசுவாமி, பதிப்பித்த லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகத்தாருக்கும் வழங்கப்பட்டது.

மகளிர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் கதவு திறந்ததும் கடல் எனும் நூலை எழுதிய பிருந்தா சேது, பதிப்பித்த ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தாருக்கும், தமிழர் வாழ்வியல் எனும் வகைப்பாட்டில் புலம் பெயர் தமிழர்கள் வாழ்வு – இருப்பு – படைப்பு எனும் நூலை எழுதிய சீனிவாசன், பதிப்பித்த பாலாஜி இண்டர்நேஷனல் பதிப்பகத்தாருக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் நடந்த விழாவில் பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.சவுமியா, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சத்யபிரியா மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 2022ம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களை படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு பரிசு: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Chennai ,Tamil Development Department ,
× RELATED தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான...