×

பத்துகாணி பகுதியில் 2 நாய்களை கவ்விச்சென்ற மர்ம விலங்கு; அரசு பள்ளி வளாகத்தில் புலி நடமாட்டமா? சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டு ஆய்வு

அருமனை: அருமனை அருகே பத்துகாணி பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் புலி நடமாட்டம் உள்ளதாகவும், அந்த பகுதியில் 2 நாய்களை புலி கவ்விச்சென்றதாகவும் பீதி கிளம்பியுள்ளது. எனவே அங்கு வனத்துறை சார்பில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அருமனை அருகே பத்துகாணி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் சில நேரங்களில் காட்டுப்பன்றி, பூனை உள்ளிட்ட வனவிலங்குகள் தென்படுவதுண்டு. ஆனால் அவற்றால் இதுவரை பாதிப்பு ஏற்படாத நிலையில், அந்த பகுதியில் தற்போது புலி நடமாட்டம் உள்ளதாக வெளியான தகவல் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புலி நடமாடியதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. நள்ளிரவில் பயங்கரமான சத்தம் கேட்டதாகவும், பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த 2 நாய்களை மர்ம விலங்கு கவ்வி சென்றதாகவும் அப்பகுதிவாசிகள் கூறியுள்ளனர். அதேபோல் பள்ளி வளாகத்தில் புலியின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வனத்துறை அதிகாரிகளுக்கு நேற்று காலையில் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது அங்கிருந்த கால்தடங்கள் காட்டு பூனையின் பாதங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காட்டு பூனைகள் அதைவிட உயரமான மற்றும் பலம் வாய்ந்த நாய்களை பிடித்து இழுத்து செல்லுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் சந்தேகத்தை தீர்ப்பதற்காக பள்ளியை சுற்றிலும் வனத்துறையினர் சிசிடிவி காமிராக்களை இன்று பொருத்தினர். இன்று இரவு மீண்டும் அந்த மர்ம விலங்கு வந்தால் கண்டிப்பாக சிசிடிவி காமிராவில் பதிவாகிவிடும். அப்போது அதனை பொறிவைத்து பிடித்துவிடலாம் என வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்கையில் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் காணப்படுவதால், ஒருவேளை மாலைநேரத்தில் பள்ளிக்கூடத்துக்குள் புலி புகுந்துவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். எனவே அரசு கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியின் இடிந்த சுற்று சுவர்களை மீண்டும் கட்டமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது ஊர்மக்கள் வேண்டுகோளாக உள்ளது. இதேபோல் ஒருதடவை பத்துகாணி பகுதியில் வீட்டு விலங்குகளை மர்ம விலங்கு அடிக்கடி வேட்டையாடி வந்தது. அதனை பொதுமக்கள் பலமுறை கூறியபிறகும் அது சிறுத்தை பூனை என்று வனத்துறையினர் கூறினர். ஆனால் கடைசியில் அது புலி என்பது தெரியவந்தது. பின்னர் அந்த புலியை கூண்டுவைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.

The post பத்துகாணி பகுதியில் 2 நாய்களை கவ்விச்சென்ற மர்ம விலங்கு; அரசு பள்ளி வளாகத்தில் புலி நடமாட்டமா? சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pathuhani ,ARUMANI ,PATUHANI AREA ,ARUMAN ,Decadutani ,Dinakaran ,
× RELATED இடைக்கோடு பேரூராட்சியில் சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு