×

தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு; குற்றால அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


தென்காசி: குற்றாலத்தில் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் நன்றாக உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர், இதமான தென்றல் காற்று போன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால் சீசன் களைகட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி போலீசார் குளிக்க தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.‌ சிறிது நேரம் கூட வெயில் தலை காட்ட வில்லை. வானம் பகல் முழுவதும் கரு மேக கூட்டம் திரண்டு வெளிச்சம் குறைவாக காணப்பட்டது.

நேற்று முன்தினம் மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு முதல் மற்ற அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது. இதனால் மெயினருவியை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் இரண்டு பிரிவுகள் ஒன்றாக இணைந்து ஒரே பிரிவாக கொட்டியது. பழைய குற்றாலத்தில் அதிகாலை வேளையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிக்கட்டுகளிலும் கரைபுரண்டு ஓடியது.

அதன் பிறகு வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. எனினும் அதிகமான தண்ணீர் காரணமாக அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையின் காரணமாக நேற்று வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பிரதான அருவிகள் உட்பட எந்த அருவியிலும் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

The post தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு; குற்றால அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kurdala ,Tenkasi ,Kourtalam ,Courtalam ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..!!