தேனி: தேனி ரயில் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி ரயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு மேல் இரவு 9 மணிக்கு சென்னை ரயில் செல்லும் வரை பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மதுரைக்கு தேனியில் இருந்து மாலை 6.35 மணிக்கு ரயில் செல்லும்போதைக்காட்டிலும் இரவு 8.50மணிக்கு புறப்படும் சென்னை ரயிலில் பயணிக்க ஏராளமான பயணிகள் குடும்பத்தினருடன் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். ரயில்நிலையத்தில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு மட்டும் நிழற்குடை உள்ளது. இதனையடுத்து ரயில்நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு நிழற்குடை ஏதும் இல்லை. இதேபோல நிழற்குடை இல்லாத பகுதியில் குடிநீர் குழாய்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன.
சென்னை செல்லும் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள், முன்பதிவு பெட்டிகள், குளிர்சாதன வசதி பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு புறப்பட்டு செல்கிறது. போடியில் இருந்து தேனி ரயில் நிலையம் வரும் இந்த ரயிலின் முதல்பெட்டி ரயில்நிலைய நிழற்குடையில் நிற்கும் போது இதன்கடைசி பெட்டி நிலையத்தின் மேற்குப்பகுதியில் சுமார் 100 மீட்டர் தள்ளி நிற்கிறது. இதனால் டிக்கட் எடுத்துள்ள பயணிகள் தங்களுக்கான பயண பெட்டிகள் இருக்கும் பகுதிக்கு நீண்ட தூரம் சென்று நிற்க வேண்டியுள்ளது. ஆனால் நிழற்குடை இல்லாத பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு நிழற்குடை இல்லாத நிலை உள்ளது. இதேபோல ஆங்காங்கே குடிநீர் குழாய் வசதியும், பயணிகள் அமருவதற்கான சிமெண்ட் இருக்கையும் போதுமான அளவில் இல்லாமல் உள்ளது .மேலும், ரயிலின் எந்த பெட்டி எங்கே நிற்கும் என்பதற்கான அடையாள குறியீடும் இல்லாத நிலை உள்ளது.
இதனால் ரயில்பயணிகள் தாங்கள் ஏறவேண்டிய பெட்டி எங்கே நிற்கும் என்ற அறிய முடியாமல் ரயில் வந்ததும் ஓடிச்சென்று தங்களுக்கான பெட்டி எது என தேடிபிடிக்கும் அவலம் உள்ளது. இதேபோல ரயில் நிலையத்தில் பயணிகளின் தேவைக்காக சிற்றுண்டி கடைக்கான வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. ரயில்நிலையத்தில் அவசர சிகிச்சைக்கான வசதிகளோ இல்லை. தற்போது தேனி மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வருவதால் நிழற்குடை இல்லாத ரயில்நிலைய பகுதிகளில் பயணிகள் ரயிலுக்காக நிற்கும் போது, மழையில் நனைந்தபடியே நிற்க வேண்டிய அவலம் உள்ளது. இதனால் மழைகாலத்தின்போது பயணிகள் மழையில் முழுமையாக நனைந்தபடியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளின் வசதியைக்கருத்தில் கொண்டு முதிய பயணிகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் ரயில்நிலையத்தில் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், குடிநீர் குழாய் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ரயில்சேவை தொடங்காத காலத்தில் கூட பயணிகள் முன்பதிவு நடந்த நிலையில், தற்போது போடி- மதுரை, போடி- சென்னை ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ரயில்நிலையத்திற்கு அதிகப்படியான பயணிகள் பகல்முழுவதும் வரும் நிலை உள்ளது. ரயில்நிலையத்திற்கு வந்து டிக்ெகட் வாங்க முயற்சிக்கும் பயணிகள் ரயில்நிலையம் பகலில் 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை பூட்டப்பட்டிருப்பதால் பயணிகள் வெளியே நிற்கக் கூட முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.அனைத்து ரயில் நிலையங்களிலும் தேசியக்கொடி பறக்கும். ஆனால் தேனி ரயில் நிலையத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்படாமல் கொடிக்கம்பம் மட்டும் உள்ளது.
எனவே, ரயில்வே நிர்வாகம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு, பயணிகள் முன்பதிவு அலுவலகத்தை மதிய இடைவேளை நேரம் தவிர காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படவும், ரயில்நிலையத்திற்குள் மழைகாலத்தில் பயணிகள் மழையில் நனையாமல் தவிர்க்க நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு புறங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிழற்குடைகள் அமைக்கவும், ஆங்காங்கே குடிநீர் குழாய் வசதியை ஏற்படுத்த வேண்டும். ரயில்நிலையத்திற்குள் பயணிகளின் வசதிக்காக திண்பண்டங்கள் விற்பனையகம் அமைக்க வேண்டும் என ரயில்பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மரத்தடிகளில் காத்திருக்கும் அவலம்
தேனி ரயில் நிலையத்தில் ஒரேயொரு அதிகாரி மட்டும் பணியில் இருந்து வருகிறார். இதனால் காலை 8 மணி முதல் காலை 12 மணி வரையும் பணியில் இருக்க வேண்டும். மதியம் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பணிநேரத்தின்போது, ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகள் முன்பதிவு செய்யவும், ரயில் டிக்ெகட் விநியோகிக்கவும் வேண்டும். ஆனால் சென்னை ரயில் இயக்கப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களாக காலை 8 மணிக்கு வரும் ரயில்நிலைய அதிகாரி காலை 11 மணிக்கெல்லாம் ரயில் நிலைய முன்பக்க நுழைவுவாயிலை பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று மாலை 4.30 மணிக்கு மேல் வருவதை வழக்கமாக்கி உள்ளார். இடைப்பட்ட நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ரயில்நிலையத்திற்குள் செல்ல முடியாமல் ரயில்நிலைய முன்பக்கம் உள்ள மரத்தடிகளில் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.
The post தேனி ரயில் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுமா?.. பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.