×
Saravana Stores

நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: மானநஷ்டஈடு வழக்கில் கூண்டில் ஏறி சாட்சியம்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக கருத்து தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு தடை கோரியும் மான நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் சார்பில், தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதிக்க மறுத்து விட்டது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரதான வழக்கு, சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் மாஸ்டர் மகாலட்சுமி முன்பு நேற்று ஆஜரானார். பின்னர் சாட்சி கூண்டில் ஏறி வழக்கு தொடர்ந்தது நான்தான் என்றார். அப்போது, அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி எடப்பாடி பழனிசாமிதான் வழக்கு தொடர்ந்தார் என்பதற்கான மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு அடுத்த விசாரணைக்காக டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

The post நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: மானநஷ்டஈடு வழக்கில் கூண்டில் ஏறி சாட்சியம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,High Court ,Chennai ,Former ,Chief Minister ,Chennai High Court ,Highway Department ,Palaniswami ,Dinakaran ,
× RELATED கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை ஏன் விசாரிக்கக் கூடாது?.. ஐகோர்ட்