×

ரேஷன் கடைகள் முன் பேனரில் விவரம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் யார், யார்?: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரை

தாம்பரம்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற யார் யாருக்கு தகுதி உள்ளது. யார் யாருக்கு தகுதி இல்லை என்ற விவரங்களை ரேஷன் கடை முன் பேனரில் வைக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தி உள்ளார். தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் சமயமூர்த்தி தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பெறுவதற்கு யார், யாருக்கு தகுதி உள்ளது, யார், யாருக்கு தகுதி இல்லை என்ற விவரங்கள் அடங்கிய பேனர் ரேஷன் கடைகள் முன்பு வைக்க வேண்டும். விண்ணப்பங்களை கொடுக்கும் போதும் இந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பங்கள் பெறும் ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்கும் என்ற மனநிலையில் இருப்பர். இத்திட்டம் தொடர்பாக அதிகமாக விளம்பரப்படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் திட்டம் தொடர்பான அரசாணையை அதிகாரிகள் ஒவ்வொருவரும் நகல் எடுத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக படித்து தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாரிகள் நன்றாக புரிந்துகொண்டால் தான் மக்களுக்கு திட்டம் குறித்து விளக்க முடியும். தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை முறையாக வழிநடத்த வேண்டும். காலை நேரத்தில் விண்ணப்பம் வினியோகம் செய்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் மக்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகவும், கோபப்படாமலும் பதில் அளிக்கக்கூடிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கேபிள் டி.வி நிர்வாக இயக்குநர் ஜான் லூயிஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக்சீவாஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்துபாலா மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரேஷன் கடைகள் முன் பேனரில் விவரம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் யார், யார்?: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல்...