×
Saravana Stores

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜாலியாக இருந்த நடிகர் தர்ஷன் பல்லாரி சிறைக்கு மாற்றம்

பெங்களூரு: சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஜூன் 8ம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னணி கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின் நீதிமன்ற உத்தரவு பேரில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் கொடுக்கப்படும் உணவை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிட அனுமதி கோரி நடிகர் தர்ஷன் தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் பிரபல ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, பேக்கரி ரகு உள்பட நான்கு பேருடன் சிறை வளாகத்தில் நாற்காலியில் அமர்ந்து டீ குடித்தும் சிகரெட் பிடித்தும் ஜாலியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதை தொடர்ந்து ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்ய அனுமதி கோரி சிறை துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று நேற்று முன்தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரை வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நடிகர் தர்ஷன் உள்பட பத்து பேரை நேற்று சிறை மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதால் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடிகர் தர்ஷனை போலீஸ் பாதுகாப்புடன் பல்லாரி சிறைக்கு அழைத்து சென்றனர். பெங்களூருவில் இருந்து ஓசூர் சாலை வழியாக ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வழியாக ஹிரியூர், செல்லகெரே, ஹானகல், விஜயநகர் வழியாக பல்லாரி சிறைக்கு காலை 9.30 மணிக்கு சென்றனர். கடந்த 1884ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல்லாரி மத்திய சிறை, கர்நாடக மாநிலத்தில் மிகவும் பழமையான சிறையாக உள்ளது. பஞ்சாப் மாநில முதல்வரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி உள்பட கொலை, ரேபிஸ்ட், தீவிரவாதம் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புள்ள குற்றவாளிகள் இந்த சிறையில் உள்ளனர். இதில் நடிகர் தர்ஷன் உயர் பாதுகாப்பு செல்லில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் தர்ஷன் மட்டும் அல்லாமல் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரமோத் (பெலகாவி ஹிண்டலக), ராகவேந்திரா, பவன், நந்தீஷ் ஆகிய மூன்று பேர் (மைசூரு), ஜெகதீஷ் (ஷிவமொக்கா), தன்ராஜ் (தார்வார்), வினய் (விஜயபுரா) ஆகிய மத்திய சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நடிகை பவித்ரா கவுடா மற்றும் தீபக் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

The post பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜாலியாக இருந்த நடிகர் தர்ஷன் பல்லாரி சிறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Darshan Ballari ,Bengaluru ,Agrahara ,Jail ,Renukasamy ,Chitradurga district ,Darshan ,Pavitra Gowda ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...