×

அவிநாசி அருகே 2 நாட்களுக்கு பின்னர் பாறைக்குழி தண்ணீரில் மூழ்கிய பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

*போலீசார் விசாரணை

அவிநாசி : காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைகுழி தண்ணீரில் வழுக்கி விழுந்த மாணவன் 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்டனர்.திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள காளம்பாளையம் பகுதியில் சுமார் 100 அடி தண்ணீர் நிறைந்துள்ள மிகப்பெரிய தனியார் பாறைக்குழி உள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் பள்ளி சிறுவர்கள் 9 பேர் பாறைக்குழியில் நிறைந்துள்ள தண்ணீரில் குளிப்பதற்காக சென்றனர். இதில், ஒரு சிறுவன் சட்டை, பேண்ட், செருப்பு ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கியபோது கால் தவறி வழுக்கி தண்ணீருக்குள் மூழ்கினார்.

அப்போது, அங்கு துணிகளை துவைத்துக்கொண்டிருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அவிநாசி தீயணைப்பு துறையினர், பெருமாநல்லூர் போலீசார் விரைந்து சென்று தண்ணீரில் விழுந்த சிறுவனை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டனர். மேலும், பாறைக்குழி தண்ணீரின் கரையோரம் சிறுவனின் பேன்ட், சர்ட், காலணியும் கிடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 10 முதல் மாலை 6 மணி வரை பாறை குழி தண்ணீரில் விழுந்த சிறுவனை தேடினர்.

நேற்று முன்தினம் இரவு நேரமானதால், போதிய அளவு வெளிச்சமும் இல்லாததால், மீண்டும் நேற்று காலை 10 மணி முதல் மாணவனை தேடும் பணியை தொடர்ந்தனர். இந்நிலையில், பாறைகள், மரக்கட்டைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவனை சடலமாக மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவன் திருப்பூர் காந்திநகர் பத்மாவதிபுரம் ஏவிபி லே-அவுட் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் திருமலைசாமியின் மகன் அஜய் (14) என்பதும், பத்மாவதிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அவிநாசி அருகே 2 நாட்களுக்கு பின்னர் பாறைக்குழி தண்ணீரில் மூழ்கிய பள்ளி மாணவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Kalampalayam ,Pongupalayam Panchayat ,Tirupur ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணிடம் சங்கிலி பறிப்பு