×

ஆவடி மாநகராட்சியில் இதுவரை 10 பேர் பாதிப்பு டெங்கு உற்பத்தி கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

ஆவடி: ஆவடி மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில், மேயர் ஜி. உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஆவடி சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் மழைநீர் வடிகாலை ஆழமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், பொத்தூர், ஆரிக்கம்பேடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

அந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் திருமுல்லைவாயில், குளக்கரை சாலையை பயன்படுத்துகின்றனர். எனவே, குளக்கரை சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும், பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள், நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், மாநகராட்சியில் புதிதாக தெரு பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்றனர். இந்த கூட்டத்தில் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி அளித்த பேட்டியில் கூறுகையில், ஆவடி மாநகராட்சியில், 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறை சார்பில் டெங்கு பாதிக்கப்பட்ட இடங்களில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு செய்த பிறகு கொசு புழுக்கள் உற்பத்தியானால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கு முன், வடிகால் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

The post ஆவடி மாநகராட்சியில் இதுவரை 10 பேர் பாதிப்பு டெங்கு உற்பத்தி கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aavadi Corporation ,Aavadi ,Aavadi Municipal Corporation ,Mayor ,G. Udayakumar ,Commissioner ,Kandasamy ,Dinakaran ,
× RELATED பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி