×

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது: தோழிக்கு ‘லொக்கேஷன்’ அனுப்பி சிக்க வைத்தார்

கோவை: கோவையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், எம்எஸ்சி பட்டதாரி. இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் வேலையைவிட்டு நின்றுவிட்டார். அந்த நிறுவனத்தினர் அவர் வேலைக்கு சேரும்போது கல்வி சான்றிதழை வாங்கி வைத்துள்ளனர். வேலையை விட்டு நின்ற பின்பு அந்த சான்றிதழை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர் கோவை கல்லூரியில் படிக்கும்போது தனக்கு வகுப்பு எடுத்த கல்வீரம்பாளையம் முருகன் நகரை சேர்ந்த பேராசிரியர் சிவப்பிரகாசத்தை (45) அணுகி, சான்றிதழை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சிவப்பிரகாசம், சான்றிதழை வாங்கி வைத்துள்ளதாகவும், வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி கோவைக்கு வரவழைத்தார். இதனை நம்பி அந்த இளம்பெண் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் மட்டுமே இருந்துள்ளார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரது பிடியில் இருந்து தப்பி இளம்பெண் குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.

பின்னர் செல்போனில் தோழி ஒருவரை தொடர்புகொண்டு, ‘லொக்கேஷன்’ அனுப்பினார். அவரது தோழி துரிதமாக செயல்பட்டு அதனை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விவரம் தெரிவித்தார். இதையடுத்து வடவள்ளி போலீசார் ‘லொக்கேஷன்’ உதவியுடன் மாணவி இருக்கும் வீட்டுக்கு சென்று குளியலறையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். கல்லூரி பேராசிரியர் சிவப்பிரகாசத்தை கைது செய்து, கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது: தோழிக்கு ‘லொக்கேஷன்’ அனுப்பி சிக்க வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tirupur district ,MSc ,
× RELATED கோவை அருகே அமர்ந்த நிலையில் இறந்த யானை