×

கோவை அருகே அமர்ந்த நிலையில் இறந்த யானை


கோவை: கோவை தடாகம் வன பகுதிக்கு உட்பட்ட பன்னீர்மடை வனத்தில் உட்கார்ந்த நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் வனப்பகுதிக்கு உட்பட்ட பன்னீர்மடை-வரப்பாளையம் செல்லும் வழியில் நேற்று இரவு வெளியே வந்த யானைக்கூட்டத்தை வன பணியாளர்கள், ரோந்து குழுவினர் காட்டுக்குள் துரத்திவிட்டனர். அப்போது கூட்டத்திலிருந்து குட்டி ஒன்று தனியாக பிரிந்து சுற்றிதிரிந்துள்ளது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குட்டியை மீட்டு பத்திரமாக வனப்பகுதிக்கு கொண்டு சென்று அருகில் உள்ள கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது பன்னிமடை அருகே வருப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த பெண் யானை குட்டியின் தாயா அல்லது யானை கூட்டத்தை சேர்ந்ததா? என்பதை வனத்துறையினர் உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வன பணியாளர்கள் மற்றும் வன கால்நடை அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இறந்த யானை இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டி உட்கார்ந்த நிலையில் உயிரிழந்துள்ளது. பொதுவாக யானைகள் இறக்கும்போது படுத்த நிலையில் தான் காணப்படும். இந்த யானை உட்கார்ந்த நிலையில் இருப்பது ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post கோவை அருகே அமர்ந்த நிலையில் இறந்த யானை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Panneermadai forest ,Coimbatore Tadagam forest ,Dinakaran ,
× RELATED கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்