திருக்கோவிலூர்
‘எவராலும், எந்த ஆயுதத்தினாலும் தான் அழியக்கூடாது’ என்ற வரத்தை பெற்றுவிட்ட ஆணவம் மேலிட உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தினான் அந்தகாசுரன். ஆனால், அவன், அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கோவிலூரில், ஈசனின் திரிசூலத்தால் அழிந்தான். அது என்ன புராணம்?
கயிலாயத்தில் ஒருமுறை சிவனின் கண்களை உமையவள் விளையாட்டாக தனது கரங்களால் மூடினாள். அவ்வளவுதான்… உலகமே காரிருளில் மூழ்கியது. அந்த இருளே ‘அந்தகன்’ என்ற அசுரனாகவும் உருவெடுத்து, உலக உயிர்கள் அனைத்தையும் வாட்டி வதைக்க முற்பட்டது.
அதுமட்டுமா? அந்தகாசுரனாக உருவெடுத்த அந்த காரிருள், தான் யாராலும், எவராலும், எந்த ஆயுதத்தாலும் அழிக்கப்படக்கூடாது என்ற அரிய வரத்தையும் பெற்றது. இதனால் அசுரனுக்கு ஆணவம் தலைக்கேறியது. உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தினான். இந்திராதி தேவர்களின் அமரர் உலகையும் அவன் விட்டு வைக்கவில்லை. திக்கெட்டும் சென்று கொடுமைகளை விளைவித்தான். பூவுலகும், தேவருலகும் நடுங்கின. பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் அவனை வெல்ல முடியாதபடி அவன் பெற்றிருந்த வரம் அவனைக் காத்துக் கொண்டிருந்தது.
இறுதியில் தேவர்கள் அனைவரும் பூவுலகில் பெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள புனிதத் தலமான திருக்கோவிலூரில் குடிகொண்டுள்ள வீரட்டானேஸ்வரரை வணங்கி, தங்கள் குறையை தெரிவித்து, வேண்டிக் கொண்டனர். இறைவனும் மனமிரங்கினார். வீரட்டானேஸ்வரர் தானே அந்தகாசுரனை அழித்திடப் புறப்பட்டார். அவனுடன் போர் புரிந்து தனது திரிசூலத்தினால் அழித்து, பூவுலகையும் அமரருலகையும் காப்பாற்றினார். ‘சிவபராக்ரமம்’ என்ற வரிசையில், வீர அட்டகாசம் செய்து கொடியவர்களை ஈசன் அழித்த தலங்கள் எட்டு. அவைதான் ‘அட்ட வீரட்டத் தலங்கள்’.
அவை: திருக்கோவிலூர், திருவதிகை, திருக்கடையூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவிற்குடி, திருப்பறியலூர் மற்றும் வழுவூர் ஆகும். அவற்றில் ஒன்றான திருக்கோவிலூர் தலத்து இறைவனை கணபதி, முருகன், ராமபிரான், கண்ணன், காளி, பரசுராமர், இந்திரன், எமதர்மன், காமதேனு, சூரியன், காமன், மிருகண்டு, பதஞ்சலி, வியாக்ரபாதர், குபேரன், சுக்கிரன், சப்த ரிஷிகள், ஆதிசேஷன், கபிலர் மற்றும் ஔவையார் ஆகியோர் பூஜித்து வழிபட்டிருக்கின்றனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருடன் அருணகிரிநாதரும் புகழ்ந்து பாடிய திருத்தலம் இது.
கங்கையே ‘தென்பெண்ணைஆறு’ தீர்த்தமாக இங்கு அமைந்துள்ளதால், கங்கையில் நீராடிய பலனை, இதில் நீராடுபவர்கள் பெறுகிறார்கள். 84 பைரவர்கள், 64 பைரவிகள் தோன்றியதும் திருக்கோவிலூர் தலத்தில்தான். சிவனடியார்களான சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமானும், வானவீதியில் கரியிலும், பரியிலுமாக, கயிலாயம் செல்வதை ஔவையார் அறிந்தார்.
தானும் அவர்களோடு கயிலை செல்ல வேண்டுமென, இத்திருத்தலத்தில் உள்ள கணபதியை துதித்து, ‘விநாயகர் அகவல்’ பாடினார். ‘சீதக்களபச் செந்தாமரைப்பூம்’ என்று துவங்கும் அந்தப் பாடலினால் அகமகிழ்ந்த ஆனைமுகன், விசுவரூபம் எடுத்து தன் துதிக்கையால் அவரைத் தூக்கிக் கொண்டு, சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்னதாகவே கொண்டுபோய் கயிலாயம் சேர்த்தாராம். அதனால்தான் அவர் ‘பெரியானைக் கணபதி’ ஆனார்.
திருக்கோவிலூர் கீழையூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் மேற்கு நோக்கியிருக்கிறது. கோயிலின் முன்பகுதி மிகவும் விசாலமானது. இரண்டு ராஜகோபுரங்கள், சுவாமி சந்நதியையும், அம்மன் சந்நதியையும் அழகு படுத்துகின்றன. வாயில் புறத்தில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடி மரம். அதையடுத்து அழகு நந்தியைக் கடந்து உள்ளே செல்கிறோம். வலதுபுறம் ‘பெரியானைக் கணபதி’ உள்ளார்.
பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், மகாவிஷ்ணு, ஆறுமுகப் பெருமான், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகிய கோஷ்ட தேவதைகள் உள்ளனர். நடராஜர் சபையில் சிவகாமியோடு, மாணிக்கவாசகரும் ஆடவல்லானை அடிபணிந்து நிற்கிறார். திருமுறைப் பேழையும் உள்ளது. அடுத்து பிரம்மா, துர்க்கை சந்நதிகள். அஷ்டபுஜ துர்க்கை பல்லவர் காலத்து பலகைச் சிற்பம் போல காணப்படுகிறது. விழிகளில் அற்புத அருள் சுரக்கிறது. சப்த மாதர், குடவரை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளனர்.
துவார பாலகரைக் கடந்து மூலவரை தரிசிக்கச் செல்கிறோம். சுயம்புலிங்கம், பெரிய திருமேனி. கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஐயன். திருநீற்றுப் பட்டைக்கு மேலே இருபுறமும் சூரிய, சந்திரர்கள். பட்டாடையில் ஜொலிக்கிறார் வீரட்டானேஸ்வரர். விழிகளை விலக்க முடியாத திவ்ய தரிசனம் அது. திருக்கோவிலூர் தலத்திற்கே பெருமை சேர்க்கும் அந்தகாசுர மூர்த்தி சந்நதி விசேஷமானது.
நான்கு கரங்களுடன், திரிசூலத்தை உயர்த்தியவாறு கம்பீரமாக காட்சி தருகிறார் இறைவன். அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கிய வெற்றிக் களிப்பு அந்த முகத்தில் தாண்டவம் ஆடுகிறது. அருகில் அன்னை சிவானந்த வல்லி. வீரட்டானேஸ்வரரின் இருமருங்கிலும் நரசிங்க முனையார், மெய்ப்பொருள் நாயனார் திரு உருவங்கள். ஈசனை தரிசித்தவுடன், அன்னை சிவானந்த வல்லியை வணங்கிட விரைகிறோம்.
தனிக்கோயில் கொண்டு, நான்கு கரங்களுடன், அபய வரத ஹஸ்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை. வெள்ளிக் கவசமும், தாடங்களும் சார்த்தி சேவிப்பது கண்கொள்ளாக் காட்சி ஆகும். மாசி மாதத்தில் பெருவிழா கொண்டாடப்படுகிறது. ஆறாம் நாள் மாலையில் ‘ஆணவம் அழியும் அந்தகாசுர வதம்’ என்பது ஐதீக உற்சவமாகும்.
கார்த்திகை சோமவார சங்காபிஷேகமும், சூரசம்ஹாரத் திருவிழாவும், விநாயகர் சதுர்த்தியும் ஆலயத்தின் சிறப்புத் திருவிழாக்கள். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூருக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
தொகுப்பு: பிரபு சங்கர்
The post அருள் தரும் அந்தகாசுர மூர்த்தி! appeared first on Dinakaran.