×

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசித்து வந்தவருக்கு மின் இணைப்புடன் புதிய வீடு

* நேரில் ஆய்வு செய்த கலெக்டர் உறுதி

நாகர்கோவில் : கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட, பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று 2ம் நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நேற்று முன் தினம் கல்குளம் தாலுகாவில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையில், கலெக்டர் அழகுமீனா மணவாளக்குறிச்சியில் ஆவின் நிலையத்தில் பால் பொருட்கள் இருப்பு, அவற்றின் காலாவதி தேதி மற்றும் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வதை பார்வையிட்டார்.

தொடர்ந்து மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட சக்கப்பற்று வளம் மீட்பு பூங்காவில் அமைந்துள்ள மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டார். மண்புழு உரத்தை, சந்தைப்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் முட்டம் பொது சுகாதார வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாத்திரைகள், மருந்துகளின் இருப்பு, காலாவதி தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அம் மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு தயார் செய்வதை நேரில் பார்வையிட்டார்.பின்னர் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட சூரப்பள்ளம் பகுதியில் பழுதடைந்த ஓலை வீட்டில், மின்சார வசதியின்றி வயதான தாய் மற்றும் குழந்தைகளுடன் தங்கதாஸ் என்ற தொழிலாளி காலம் காலமாக வசித்து வரும் நிலையில் அவரது வீட்டை கலெக்டர் பார்வையிட்டார். அவர் சில நாட்களுக்கு முன்பு தனக்கு அரசின் சார்பில் மின்சார வசதியுடன் புதிய வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அவரின் மனு பரிசீலிக்கப்பட்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டி தரப்படும் என்று உறுதியளித்தார். மேலும் குருந்தன்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைமானி மற்றும் காற்றுமானி அமைக்கும் பணியினையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு. உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, கல்குளம் தாசில்தார் முருகன், துணை தாசில்தார் சந்திரசேகர், செயற்பொறியாளர், செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசித்து வந்தவருக்கு மின் இணைப்புடன் புதிய வீடு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,District Collector ,Akummeena ,Kalkulam taluka ,Tamilnadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற...