×
Saravana Stores

கலைஞர் நூற்றாண்டு விழா: ஓராண்டில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகள் ஓர் பார்வை

சென்னை: முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கடந்தாண்டு மே.25ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தலைமை செயலாளர் தலைமையில் 5 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு அமைச்சர்கள் தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதனையடுத்து முதல்வர் தலைமையிலும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும், காந்தியடிகளின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியால் கடந்தாண்டு ஜூன்.2ம் தேதி கலைஞர் நூற்றாண்வு விழாவை கொண்டாடும் விதமாக ‘‘கலைஞர் 100’’ என்ற இலச்சினை வெளியிடப்பட்டது. இதன் பின்னர், கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையை கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி கிங் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் திறந்து வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்தாண்டு ஜூலை 15ம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்-2023 போட்டியில் 73,206 நபர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். ‘‘ www.kalaignar100.com’’ என்ற கலைஞர் நூற்றாண்டு விழா இணையதளம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல், பேரறிஞர் அண்ணா நினைவிடம் புதுபிக்கப்பட்டும் கலைஞருக்கு நினைவிடம் நிலவறையில் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்துடன் அமைக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த பிப்.26ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இதுதவிர, திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிப்பட்டியில், கலைஞர் நூற்றாண்டு, ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை சிறப்பாக கொண்டாட ரூ.8,34,40,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 12 சிறப்பு குழுக்களுக்கு ஒரு குழுவிற்கு ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு மாவட்டத்திற்கு 3 நிகழ்ச்சிகள் நடத்த ரூ.11,80,000 வீதம் 38 மாவட்டங்களுக்கு ரூ.4,48,40,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுமட்டுமல்லாது, வருவாய் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணாக்கர்களுக்கு ரொக்கத் தொகை ஆண்டுதோறும் வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.2 லட்சம் வீதம் ரூ.76 லட்சம் கலைஞர் நூற்றாண்டு தமிழ் ஊக்குவிப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புக் குழுக்களில் கலைஞர் – கலைஞர் குழுவிற்கு கூடுதலாக ரூ.75லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் – கலைஞர், குழுவிற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் பெயரில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்பாக வைக்கப்பட்டு, அதன் வருவாயை கலைஞரின் பன்முக தன்மையை போற்றும் வகையில் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாழும் 275 தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் ஒருமுறை மட்டும் வழங்கிட ஏதுவாக ரூ.27,50,000 நிதி ஒப்படைப்பு செய்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

* கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பின்வருமாறு:

* கலைஞர் நூற்றாண்டு விழா ‘‘சட்டமன்ற நாயகர் கலைஞர்” குழுவின் மூலம் 37 மாவட்டங்களில் 120 பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

* ‘‘இதழாளர் கலைஞர்’’ – புகைப்படக் கண்காட்சி கடந்த ஆண்டு அக்.18ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்றது.

* ‘‘ஏழைப்பங்காளர் கலைஞர்”- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு அக்.21ம் தேதி அன்று கருத்தரங்கம், பட்டிமன்றம் நடத்தப்பட்டது மற்றும் கண்காட்சி அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

* “எழுத்தாளர் கலைஞர்” – திருநெல்வேலி கடந்தாண்டு நவ.4ம் தேதி நடத்தப்பட்டது. இதில் கலைஞரின் அரும்பங்களிப்பை எடுத்துரைக்கும் விதமாக ‘‘முத்தமிழ்த் தேர்” கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னை வந்தடைந்தது.

* வேலூரில் கடந்தாண்டு நவ.25ம் தேதி புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம், பகுத்தறிவு சீர்திருத்தச் செம்மல் கலைஞர் விழா மலர் வெளியிடப்பட்டது.

* ‘‘தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர்”
மையக் கருத்து பாடல் வெளியீடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் கரூர் மாவட்டத்தில் கடந்த நவ.4ம் தேதி நடத்தப்பட்டது.

* ‘‘கலைஞர் பண்பாட்டுப் பாசறை” – கருத்தரங்கம், புகைப்படக் கண்காட்சி வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

* ‘‘நவீன தமிழ்நாட்டின் சிற்பி – கலைஞர்’’ – சேலம் மாவட்டத்தில் புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சி, கவியரங்கம் சிறப்பாக நடத்தப்பட்டு விழா மலர் வெளியிடப்பட்டது.

* ‘‘நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” – சென்னை மாவட்டத்தில் கடந்தாண்டு நவ.5ம் தேதி கண்காட்சி, கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மற்றும் நிறுவனங்களின் நாயகர் கலைஞர் மலர் மற்றும் குறும்படம் வெளியிடப்பட்டது.

* ‘‘ கலைஞர் கலைஞர்” விழாக்குழுவின் சார்பில் ‘‘இசையாய் கலைஞர்” காணொலியுடன் கூடிய மெல்லிசை நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இந்தாண்டு அன்று நடத்தப்பட்டது.

* குழுவிற்கு ரூ.25,00,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் பெயரில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்பாக வைக்கப்பட்டு, அதன் வருவாயை கலைஞரின் பன்முக தன்மையை போற்றும் வகையில் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* ‘‘சமூக நீதிக் காவலர் கலைஞர்” – குழு மூலம் கல்லூரிகளில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓராண்டில் பல்வேறு துறைவாரியாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:

* கூட்டுறவுத்துறை மூலமாக சுய உதவி குழுக்களுக்கான கடன், தொழில் முனைவோர்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான – கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்க முகாம்கள் நடத்தப்பட்டன.

* தீயணைப்பு துறை சார்பாக 35 மாவட்டங்களில் 100 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பொதுமக்களுக்கு மாதிரி மற்றும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

* நெடுஞ்சாலைத்துறை மூலமாக 100 மேம்பாலங்களை புதுப்பித்தல் மற்றும் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.

* சுற்றுலாத்துறை சார்பாக 16 மாவட்டங்களில் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றுள்ளது.

* அருங்காட்சியகங்கள் துறை சார்பாக 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் மற்றும் பல்வேறு புகைப்பட கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

* தோட்டக்கலை துறை சார்பாக கலைஞர் நூற்றாண்டு மலர்க்கண்காட்சி சென்னை செம்மொழிப் பூங்காவில் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதுதவிர பல்வேறு கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான பணிகள் என்பது நடைபெற்று வருகின்றன. அதன்படி, கலைஞர் நூற்றாண்டு தமிழ் ஊக்குவிப்பு நிதி வழங்குவதற்காக வருவாய் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டது.

12 குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து விழா நிறைவு அறிக்கை மற்றும் பயனீட்டு சான்று பெறப்பட்டு வருகிறது. மேலும், கலைஞர் நூற்றாண்டு பசுமை பூங்கா ராதாகிருஷ்ணன் சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவினை மாவட்டம் தோறும் சிறப்பாக கலைவிழா, நலத்திட்ட விழா, பரிசளிப்பு விழா என மூன்று நிகழ்வுகளாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டன.

இதுமட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கூட்டுறவுத்துறையின் சார்பில் கடன் மேளா தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நீடாமங்கலம் மக்கள் மன்ற வட்ட அரங்கில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில் தேர்வான இளைஞர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர்துறை சார்பில் 1425 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதேபோல், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருவைக்குளம் மாநகராட்சி கலவை உரக்கிடங்கில் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் 66,000 பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும்விழா நடைபெற்றது. இவ்வாறு, கலைஞர் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

The post கலைஞர் நூற்றாண்டு விழா: ஓராண்டில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகள் ஓர் பார்வை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muthamil ,Tamil Nadu ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED அரசு சட்ட கல்லூரிகளில் காலியாகவுள்ள...