- திரிணமுல்
- டெல்லி பொலிஸ் நிலையம்
- தேர்தல் ஆணையம்
- ஆம் ஆத்மி கட்சி
- புது தில்லி
- திரிணாமூல் காங்கிரஸ்
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- ஆம் ஆத்மி
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- தின மலர்
புதுடெல்லி: தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், டெல்லி காவல் நிலையத்தில் விடிய விடிய தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். ஆம் ஆத்மி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து தர்ணாவில் பங்கேற்றனர்.
ஒன்றிய பாஜ அரசின் உத்தரவின் பேரில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த அமைப்புகளின் தலைவர்களை மாற்ற வேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் டெல்லி வந்தனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி, தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக 24 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் திரிணாமுல் எம்பிக்களை குண்டுகட்டாக கைது செய்து, மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கேயே இரவு முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களும் காவல் நிலையத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
எம்பிக்களின் தர்ணா நேற்றும் தொடர்ந்தது. அறிவித்த படி மாலை வரை 24 மணி நேர தர்ணா போராட்டத்தை காவல் நிலையத்திலேயே அமைதியான முறையில் எம்பிக்கள் நடத்தி முடித்தனர். முன்னதாக எம்பிக்களை நேற்று முன்தினம் இரவே காவல் நிலையத்தில் இருந்து வெளியேற போலீசார் அனுமதித்தும் அவர்கள் வெளியேறாமல் அங்கேயே தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திரிணாமுல் தலைவர் கோகலே தனது டிவிட்டர் பதிவில், ‘எங்கள் எம்பிக்கள் மந்திர் மார்க் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். அங்கேயே அவர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தை நடத்தி உள்ளனர். மோடி, அமித்ஷா, பாஜ ஆகியவை வெட்கமின்றி ஒன்றிய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர்’ என்றார்.
The post தேர்தல் ஆணைய அலுவலகம் முன் கைதானதால் டெல்லி காவல் நிலையத்தில் திரிணாமுல் எம்பிக்கள் தர்ணா: ஆம் ஆத்மி தலைவர்களும் பங்கேற்பு appeared first on Dinakaran.