சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளரை கைது செய்ய, தனிப்படை போலீசார் கடலூருக்கு விரைந்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம், போலீஸ் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும், அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை எழுதியவர் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் என்று போடப்பட்டு இருந்தது.
இதையடுத்து செம்பியம் போலீசார், படூரில் இருந்த சதீஷை பிடித்து நடத்திய விசாரணையில் சதீஷ் அப்பாவி என்பதும், தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரை சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. அதில், செங்கல்பட்டை சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர், கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தார். அப்போது, அவரிடம் கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளி அப்பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவர், பள்ளி அங்கீகாரம் தொடர்பாக மனு அளித்தபோது, அதை ரோஸ் நிர்மலா நிராகரித்துள்ளார். பின்னர், அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வும் பெற்றுவிட்டார்.
இந்நிலையில், தனது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததால் அவரை பழிவாங்குவதற்காக அருண்ராஜ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார். ரோஸ் நிர்மலாவின் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசிக்கும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவருக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக ஒட்டி வந்தார். மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் குறித்தும் அவரது வீடு, கடை ஆகிய இடங்களிலும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வந்தார். இதுகுறித்து ரோஸ் நிர்மலா அப்போதைய தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்ததை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை ைகது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் அருண்ராஜ் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அருண்ராஜை பிடிக்க கேளம்பாக்கம் போலீசார் கடலூர் விரைந்து உள்ளனர்.
The post ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை மிரட்டிய வழக்கில் சிக்கும் பள்ளி தாளாளர்: கடலூர் விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.