தா.பழூர், ஆக.1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த தொழில்நுட்பம் அளிக்கப்பட்டது. இதில் உளுந்து சாகுபடியில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையினால் உளுந்தின் தரம், அளவு மற்றும் எடை சுமார் 10-15% வரை குறையும்.
உளுந்து சாகுபடியில் பூ உதிர்வது தடுக்கவும், அதிக பூக்கள் பிடிக்கவும், காய் பிடிக்கும் திறனை அதிகரிக்கவும், வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கவும் டிஎன்ஏயூ என்ற பயறு அதிசயம் மருந்து (TNAU Pulse wonder) தெளிக்க வேண்டும். இதனை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு அதிசயம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி நன்கு பூ பிடிக்கும் தருவாயில் (30-35 நாட்கள்) தெளிக்க வேண்டும்.
தெளிக்கும் போது, ஒட்டு திரவத்தை (0.5 மிலி/லிட்டர் நீர்) சேர்த்து தெளிக்க வேண்டும். மேலும் இதனுடன் எவ்வகையான பூச்சி மற்றும் நோய் மருந்துகளை கலந்து தெளிக்க கூடாது. ஒரு ஏக்கருக்கு தெளிப்பதற்கு 2 கிலோ தேவைப்படும். ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.550. மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் 9688810919 என்பவரை தொடர்பு கொண்டு விவசாயிகள் சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம். இவ்வாறு கிரீடு வேளாண் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தெரிவித்துள்ளார்.
The post கிரீடு வேளாண் மையம் சார்பில் பயறு சாகுபடி தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.
