×

“நான் முதல்வன்” திட்டம் குறித்துப் பாராட்டு: ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிஅழகன் “நான் முதல்வன்” திட்டம் குறித்துப் பாராட்டிப் பேசியதையடுத்து, அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை; பேரவைத் தலைவர், இங்கே எனக்கு முன்பு உறுப்பினர் தம்பி வெற்றி அழகன் மிக அழகாக, நிதானமாக பல்வேறு கருத்துக்களை எடுத்து வைத்து உரையாற்றியிருக்கிறார். அவர் பேசுகிறபோது, நான் முதல்வன் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, சில விவரங்களையெல்லாம் தெரிவித்தார்.

சில விளக்கங்களைக் கேட்டார். எனவே, அதையொட்டி நான் சில செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பேரவைத் தலைவர், தமிழ்நாட்டு மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம். அந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, தற்போது வெளியான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

2016 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை மாறி 2021-ல் வெறும் 27 மாணவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதை கவனத்தில் வைத்து, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டது. குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகக்கூடிய ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு வழங்கினோம். மேலும், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயாராகக்கூடிய மாணவர்களுக்கு ரொக்கமாக 25 ஆயிரம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கினோம்.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ‘அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்தின்’ மூலமாக இந்த மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன. நாம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் பயனாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், இவர்களில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுப் பயனடைந்திருக்கக்கூடியவர்கள்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் போற்றத்தக்க இந்த வெற்றியினை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். அதற்காக சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை தங்கள் வாயிலாக இந்த அவையிலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியினை நாளை மறுதினம் அவர்கள் பயிற்சி பெற்ற அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடத்திடவும், அதில் நான் கலந்துகொள்ளவும் இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பேரவைத் தலைவர், கடைக்கோடித் தமிழ் இளைஞர்களின் கனவுகளையும் நனவாக்குவதே இந்த திராவிட மாடல் அரசின் முழுமுதற் கடமை! அதனை தொடர்ந்து செய்வோம் என்ற உறுதியினை அளித்து அமைகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post “நான் முதல்வன்” திட்டம் குறித்துப் பாராட்டு: ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chief Mu. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,MLA Mudhalwan ,Tamil Nadu Assembly Assembly ,K. Stalin ,Chief Minister for Legal Affairs ,Mahalwar Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED மின்சாரம் வாழ்க்கையின் ஒரு...