×

முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு

புதுடெல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் வாலிபர் ஒருவரின் அண்ணன் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த வாலிபரை கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கில் தொடர்புடைய ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்திக்கு நிபந்தனை பிறப்பித்திருந்தது. ஏடிஜிபி ஜெயராம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது மட்டுமில்லாமல், ஜெயராமின் இடைநீக்கத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது.

அதேப்போன்று வாலிபர் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணையையும் உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றி அமைத்து கடந்த 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கில் இருந்து முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘இந்த விவகாரத்தில் வாலிபர் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம், போன் உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன எனக்கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 27ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ஜெகன்மூர்த்தி தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஜெகன் மூர்த்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் கடந்த 27ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோன்று இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமீன் வழங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Jegan Murthy ,Supreme Court ,NEW DELHI ,THIRUVALANGAD AREA ,THIRUVALLUR DISTRICT ,Dinakaran ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...