×

சென்னை செல்ல வேண்டாம் என்று தலைமை கூறியதால் ஆத்திரம் டெல்லியில் மோடி விழாவை புறக்கணித்த அண்ணாமலை: தமிழக பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தி

சென்னை: மோடியை வரவேற்க சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று அமித்ஷா உத்தரவிட்டதால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, டெல்லியில் நேற்று முன்தினம் மோடி கலந்துகொண்ட தமிழ்ப்புத்தாண்டு விழாவை புறக்கணித்தார். இது தமிழக பாஜவினர் மத்தியில் கடும் அதிருப்தியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழ்ப்புத்தாண்டு விழாவை கொண்டாடினார். இந்த விழாவில் கலந்துகொள்ளும்படி பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், ஆளுநர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். முதல் முறையாக இந்த விழாவை அவர் கொண்டாடுவதால் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

விழாவில் பிரதமர் மோடி பட்டு வேட்டி, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து வந்திருந்தார். எல்.முருகனும் அதேபோல பட்டு வேட்டியில் வந்திருந்தார். ஆளுநர்கள் இருவரும் பட்டு உடைகளில் வந்திருந்தனர். இந்த விழாவில் தமிழக பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள், 2ம் கட்ட தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர். விழாவுக்கு வரும்படி பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எல்.முருகன் அழைப்பு விடுத்திருந்தார். விழாவில் கலந்துகொண்ட மோடி, நீண்ட நேரம் இருந்தார். கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். ஆனால் அந்த விழாவில் அண்ணாமலை மட்டும் கலந்துகொள்ளாமல் சென்னைக்கு வந்து விட்டார். இது பாஜ தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜவுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. எத்தனை திட்டங்கள் போட்டாலும் பாஜவால் தமிழகத்தில் வளர முடியவில்லை. ஆனாலும் பாஜவின் டெல்லி தலைமை தீவிரமாக கட்சியை வளர்க்க முயன்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இதை குறிவைத்து தான் பாஜ வேலை செய்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அண்ணாமலையின் செயல்பாட்டில் டெல்லி தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. அவர் முன்னுக்குப் பின் முரணாக செயல்பட்டு வருவது மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதனால், தமிழக பாஜ மேலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க டெல்லி தலைமை முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 9 தொகுதிகளை குறிவைத்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தும்படி எல்.முருகனுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. அவரும் அண்ணாமலையை தவிர்த்து விட்டு மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேநேரத்தில், கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, அங்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு செல்லாமல் டெல்லியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று அமித்ஷா கூறிவிட்டார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க சென்னை செல்வதாக அமித்ஷாவிடம் கூறிவிட்டு விமான டிக்கெட்டும் எடுத்தார் அண்ணாமலை.

ஆனால், அமித்ஷாவோ டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டு டெல்லியில் இருக்கும்படி கூறிவிட்டார். இதனால் எல்.முருகன் தலைமையில் தமிழக பாஜ நிர்வாகிகள் மோடியை வரவேற்றனர். இது அண்ணாமலைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, டெல்லியில் மோடி கலந்து கொள்ளும் தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியை அண்ணாமலை புறக்கணித்து விட்டார். சென்னைக்கு வந்த மோடியை வரவேற்க வேண்டாம் என்று டெல்லி தலைமை கூறிவிட்டதால், டெல்லியில் நடக்கும் விழாவை வேண்டும் என்றே அவர் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இது பாஜவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக உள்ள பி.எல்.சந்தோசால் நியமிக்கப்பட்டவர். அவர் ஆர்.எஸ்.எஸ்.சின் வளர்ப்பு. இதனால் அவர் மோடியை புறக்கணித்து விட்டார்.
ஆர்.எஸ்.எஸ்.சை பொறுத்தவரை தனிப்பட்ட நபருக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். இதனால்தான் மோடிக்கு எதிராக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வளர்த்து வருகிறது. இந்த மோதல் ஆர்.எஸ்.எஸ்., பாஜவுக்கிடையே எப்போதும் இருக்கும். இதனால் ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பெற்ற அண்ணாமலை, மோடியை கண்டு ெகாள்ளாமல் பி.எல்.சந்தோஷ் ஆதரவு கொடுக்கும் தைரியத்தில் தனித்து செயல்பட தொடங்கிவிட்டார் என்கின்றனர் தமிழக பாஜ நிர்வாகிகள்.

இந்த உள் விவகாரங்கள் பாஜ மேல்மட்ட தலைவர்களுக்கு தெரியும். கீழ்மட்ட தலைவர்களுக்கு இந்த விவகாரங்கள் தெரியாது. கீழ்மட்ட தலைவர்களுக்கே தெரியாத பட்சத்தில் மக்களுக்கு எப்படி தெரியும். ஆனால் அது தெரியாமல் அண்ணாமலை டெல்லி மேலிடத்துடன் மோதல் போக்கை தொடங்கியுள்ளார் என்கின்றனர். இதனால்தான் டெல்லி தலைமையும் அண்ணாமலைக்கு மாற்றாக எல்.முருகனை தேர்தல் பணிகளில் களம் இறக்கியுள்ளது என்கின்றனர். இந்த மோதலில் வெற்றி பெறப்போவது டெல்லி தலைமையா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற அண்ணாமலையா என்ற பரபரப்பு பாஜ நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது.

The post சென்னை செல்ல வேண்டாம் என்று தலைமை கூறியதால் ஆத்திரம் டெல்லியில் மோடி விழாவை புறக்கணித்த அண்ணாமலை: தமிழக பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Modi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,BJP ,Amit Shah ,
× RELATED சமத்துவ சமூகம் உருவாக போராடிய...