×

ஆம்பூர் அருகே 2வது நாளாக காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

ஆம்பூர்: ஆம்பூர் அருகே 2வது நாளாக காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக-ஆந்திர வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 5 யானைகள் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆம்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு மாமரம், விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்றிரவு 2வது நாளாக அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள பொன்னப்பல்லி கிராமத்தில் யானைக்கூட்டம் வந்தது.

அப்போது அங்கிருந்த மகி, சேகர், மகேஸ்வரி ஆகியோரது மாந்தோப்புகளில் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தின. மேலும் அதே ஊரை சேர்ந்த கருணாகரன் என்பவரது வாழை தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களையும் சேதப்படுத்தின. குருசாமி என்பவரது நிலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள முள் வேலிக்கம்பங்களை முறித்து எறிந்துள்ளது. இதுகுறித்து ஆம்பூர் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனவர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்களை யானைக்கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. 10 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திராவின் நன்னியாலா கும்கி யானைகள் முகாம் அமைந்துள்ளது. ஆந்திர வனப் பகுதிக்கு இந்த யானைகள் சென்றால், அம்மாநில வனத்துறையினர் கும்கி உதவியுடன் மீண்டும் தமிழகத்திற்கு இந்த யானைக்கூட்டத்தை திருப்பி விரட்டுகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறினர்.

The post ஆம்பூர் அருகே 2வது நாளாக காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Ambur ,Tamil Nadu- ,Andhra ,Ampur ,
× RELATED கண்டலேறு அணையில் இருந்து...