×

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இவற்றை காண நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து ரசிப்பது வழக்கம். பொங்கல் தினமான வரும் 15ம் தேதி அவனியாபுரத்திலும், மறுநாள் 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.இதையொட்டி இந்த 3 இடங்களிலும் ஜல்லிக்கட்டிற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, வாடிவாசலுக்கு வண்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணி, வாடிவாசல் மைதானத்தை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு இன்னும் ஒரு சில தினங்களில் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளது. சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கு, மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும். விலையுயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழா நடக்கும். தகுதி சான்றுடன் ஆன்லைன் பதிவு பெற்ற காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம்.

The post உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. appeared first on Dinakaran.

Tags : Mugurthakal ,Alankanallur jallikattu ,Alankanallur ,Avaniyapuram ,Palamedu ,Madurai district ,Mugurthak ,
× RELATED அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை