×

ஆலந்தூர் மண்டலத்தில் காலியாக உள்ள அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மண்டல குழு தலைவர் அறிவுறுத்தல்

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலத்தில் காலியாக உள்ள அரசு நிலங்களை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று மண்டல குழு தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் உமாபதி (பொறுப்பு), சுகாதார அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 40 தீர்மானங்கள் அவைமுன் வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.

இந்த கூட்டத்தில் நடந்த மாமன்ற திமுக உறுப்பினர்களின் விவாதம் வருமாறு:
அமுத பிரியா: எனது வார்டுக்கு உட்பட்ட மீனம்பாக்கத்தில் இ-சேவை மையம் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் நலனுக்காக உடனடியாக அதை திறக்க வேண்டும். பூங்கொடி ஜெகதீஸ்வரன்: ஆதம்பாக்கத்தில் சில தெருக்களில் பெயர் பலகை இல்லை. அதனை அமைத்துத் தரவேண்டும். ரேணுகா சீனிவாசன்: ஆலந்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் சாலையை ஆக்கிரமித்து, தனியார் வாகனங்கள் சுகாதாரப் பணிக்கு இடையூறாக நிற்கின்றன. உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். துர்காதேவி நடராஜன்: நங்கநல்லூர் 21, 44, 45 போன்ற தெருக்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

பாரதி குமரன்: நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோயில் தெருவில் குடிநீர் வினியோகம் வேகம் குறைந்து சிறிதளவே வருகிறது. இங்கு பகிர்மான குழாய் அமைத்துத் தர வேண்டும். செல்வேந்திரன்: முகலிவாக்கத்தில் பாதாள சாக்கடை பணி முடிந்த பகுதி குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் மக்கள் சேற்றில் சறுக்கி விழுகின்றனர். இங்கு உடனே சாலை அமைத்துத் தரவண்டும். பிரசவ மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். தேவி யேசுதாஸ்: பழவந்தாங்கலில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதேபோல் நியூ காலனி சமுதாயக் கூடத்தினை சீரமைத்து தரும்படி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

சாலமோன்: ஆலந்தூர் கண்ணன் காலனியில் பாதாள சாக்கடைப் பணி முடிந்த இடங்களில் சாலை அமைத்துதர வேண்டும். நோபுள் தெரு மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதற்கு மண்டலக்குழு தலைவர் சந்திரன் பதிலளித்து பேசும்போது, மழைக்காலம் நெருங்குவதாலும், பள்ளிகள் திறக்கப்பட்டதாலும் ஆபத்து ஏற்பபடாத வகையில் மழைநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும். மண்டலம் முழுவதும் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு, சிறு சிறு பணிகளை உடனடியாக நிறைவேற்றி, காலியாக உள்ள அரசு நிலங்களை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும்,’’ என்றார்.

The post ஆலந்தூர் மண்டலத்தில் காலியாக உள்ள அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மண்டல குழு தலைவர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Alandur zone ,Zonal committee ,Alandur ,Dinakaran ,
× RELATED மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில்...