×

அழிந்து வரும் இனங்களை மீட்கும் ஆராய்ச்சி மையம்: 5 ஆண்டுகளில் 44 ஆலம்பாடி மாடுகள் இனப்பெருக்கம்

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டு மாடுகளான தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம், கும்பளாச்சேரி ஆகிய 4 நாட்டு மாடு இனங்களையே விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிராமமே ஆலம்பாடி. இந்த ஊரில் தோன்றிய மாட்டினமே, ஆலம்பாடி நாட்டு மாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை மாட்டினங்கள் வண்டி இழுப்பதற்கும், விவசாய பணிகளுக்கும் பயன்படுகின்றன. சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய ஆலம்பாடி மாடுகள், நீண்ட கால்களையும், முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றியையும், கனத்த
கொம்பையும் கொண்டிருக்கும். இந்த மாட்டினங்களுக்கு குறைந்த அளவு தீவனமே போதுமானது. பராமரிப்பு செலவும் குறைவு.

இந்த மாடுகள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் ஆலம்பாடி மாடுகள் மட்டுமே உள்ளன. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் பூதனஅள்ளி, கோவிலூர், லளிகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பென்னாகரம் சுற்றியுள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, பெரும்பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. நாட்டு இன மாடுகளை பாதுகாத்து, வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தமிழர்கள்தான்.

இயந்திரங்கள் இல்லாத காலத்தில், நாட்டு இன மாடுகளை கொண்டே உழவு ஓட்டுதல், விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கும், பால் உற்பத்திக்கும் ஈடுபடுத்தப்பட்டது. விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் புகுந்த பின்னர், மாடுகளை பயன்படுத்துவது குறைந்தது. வீடுகளில் நாட்டு மாடுகள் வளர்ப்பது குறைந்து, கலப்பின ஜெர்சி மாடுகள், வியாபார நோக்கத்தில் பாலுக்காக வளர்க்கப்பட்டதால், நாட்டு இன மாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆலம்பாடி நாட்டு மாடு இனமும், அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டது. இதனிடையே, ஆலம்பாடி நாட்டு மாடுகள் குறித்து தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் பயனாக, ஆலம்பாடி கால்நடை இன ஆராய்ச்சி நிலையத்தை, தர்மபுரியில் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில், ₹4 கோடி மதிப்பீட்டில் தொடங்குவதற்கான அனுமதியும், நிதியும் கோரி கடந்த 2018ம் ஆண்டில், தமிழ்நாடு அரசிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆலம்பாடி பசுக்களை காக்கவும், இன விருத்தி, உறைவிந்து மூலம் சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், ஆலம்பாடி இன கால்நடை ஆராய்ச்சி நிலையமானது, காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளி கிராமத்தில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி மையத்தை பார்வையிட, தினமும் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் நாட்டு மாடு வளர்ப்பு குறித்து பயிற்சியும் பெற்று செல்கின்றனர். மேலும், கால்நடை தீவன வளர்ப்பு குறித்தும் கேட்டறிந்து செல்கின்றனர். ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முரளி கூறியதாவது:மிகவும் பாரம்பரியமான ஆலம்பாடி நாட்டு மாடுகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் தர்மபுரி மாவட்டத்தில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம், 31 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 12 ஏக்கரில் தீவனப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. மாடுகளுக்காக 3 கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளன. நாட்டு மாடுகள் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்டவையாகும்.

முதலில் 4 மாடுகள் வாங்கி வந்து வளர்த்தோம். அவை கன்றுகள் ஈன்று தற்போது 44 மாடுகளாக பெருகி உள்ளன. இதில் 3 கன்றுகளை விற்பனை செய்துள்ளோம். மேலும் பால் உற்பத்தியும் இங்கு நடக்கிறது. ஒரு லிட்டர் பால் ₹60க்கு விற்பனை செய்கிறோம். பால்கோவா ஒரு கிலோ ₹400க்கு விற்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரம் கிலோ ₹10க்கும், நாட்டுமாடு சாணம் ஒரு டன் ₹2500க்கும் விற்கப்படுகிறது. தற்போது உள்ள மாடுகள் கன்றுகளாக உள்ளன. இவை வளர சுமார் 3 ஆண்டுகள் ஆகும். அதன் பின்னரே செயற்கை கருவூட்டல் மூலம், நாட்டு மாடுகளை இனப்பெருக்கம் செய்ய உள்ளோம். ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் மூலம், அழிவின் விளிம்பில் இருந்து அவை காக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அழிந்து வரும் இனங்களை மீட்கும் ஆராய்ச்சி மையம்: 5 ஆண்டுகளில் 44 ஆலம்பாடி மாடுகள் இனப்பெருக்கம் appeared first on Dinakaran.

Tags : Endangered Species Rescue Research Centre ,Tamil Nadu ,Alambadi ,Dharmapuri district ,Kangeyam ,Kumbalacheri ,Erode district ,Okanagan ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...