×

காற்று மாசு அதிகரிப்பு டெல்லி அரசு அலுவலக பணி நேரம் மாற்றம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் ‘கடுமை’ பிரிவுக்கு காற்று மாசு சென்றதால், நேற்று முதல் ‘கிராப் -3’ கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதில், 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. 6ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும், காலை 10 மணி வரை விளையாட்டு உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று காலை 9 மணி அளவில் காற்றுத்தரம் கடுமை அளவான 411 புள்ளி பதிவானது. மாலை 4 மணிக்கு 396 ஆகக் குறைந்தது. இதையடுத்து டெல்லியில் அரசு அலுவலக நேரத்தை முதல்வர் அடிசி மாற்றி அமைத்தார். ஒன்றிய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும், டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 முதல் மாலை 5 வரையிலும் செயல்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பொது போக்குவரத்திற்காக 106 கூடுதல் பஸ்கள், மெட்ரோ ரயில்கள் தினமும் 60 கூடுதல் பயணங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ் III பெட்ரோல் மற்றும் பிஎஸ் IV டீசல் வாகனங்கள் இயக்கப்பட்டால் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க போக்குவரத்துத் துறை 84 குழுக்களை நியமித்துள்ளது. விதிமீறுபவர்களை பிடிக்க மேலும் 280 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post காற்று மாசு அதிகரிப்பு டெல்லி அரசு அலுவலக பணி நேரம் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Delhi government ,Dinakaran ,
× RELATED மதுபான முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலிடம்...